AR Rahman: `ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்!' - ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!
இது ஆசிஃப் அலியின் ஆண்டு!
நடிகர் ஆசிஃப் அலியின் படத்தேர்வுகள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளன.
இந்தியளவில் வழக்கம்போல் இந்தாண்டும் மலையாளத் திரையுலகமே கவனிக்ககூடிய நல்ல திரைப்படங்களைக் கொடுத்துள்ளனர். ஒரு சில படங்களைத் தவிர்த்து பெரும்பாலும் கதையம்சமுள்ள படங்களே திரைக்கு வந்துள்ளன.
ஆச்சரியமாக தமிழிலும் இந்தாண்டு சில வித்தியாசமான முயற்சிகளும் வெளியானது. குறிப்பாக, சிறிய பட்ஜெட்களில் உருவான கொட்டுக்காளி, ஜமா, வாழை, போகுமிடம் வெகுதூரமில்லை படங்கள் ரசிகர்களிடம் பெரிதாக கவனம் பெற்றன.
இருப்பினும், மலையாள சினிமாவின் தரம் ஆண்டுக்காண்டு மெறுகேறிக்கொண்டே இருக்கிறது. தற்போது, வணிக ரீதியாகவும் மாலிவுட் மிகப்பெரிதாக முன்னேறியிருக்கிறது. சாதாரணமாகவே அம்மொழிப்படங்கள் ரூ. 50 கோடியை வசூலிக்கின்றன.
அதிலும் இந்தாண்டு மலையாளத்தில் வெளியான நல்ல படங்களில் நடித்த நாயகனாக அசத்தியிருக்கிறார் நடிகர் ஆசிஃப் அலி.
திரைத்துறைக்கு 2009 -ல் அறிமுகமான ஆசிஃப் அலியின் வளர்ச்சி படிப்படியாகவே நிகழ்ந்துள்ளது. அதிலும், ஆண்டிற்கு 5 படங்களில் நடித்தால் ஒன்று மட்டுமே வெற்றியைப் பெறும். தட்டுத்தடுமாறி நாயகன், துணைக் கதாபாத்திரம் என தனக்கு சொல்லிக்கொள்ளும் காட்சிகள் இருந்தாலே போதும் என படங்களில் ஒப்பந்தம் ஆனார்.
2019-ல்தான் உயரே, வைரஸ், கெட்யோளானு எண்டே மலேகா உள்ளிட்ட வெற்றிப்படங்களில் தெரிய ஆரம்பித்தார். தொடர்ந்து, குட்டாவும் சிக்ஷாவும், கூமன், 2018 படங்கள் வெளியாகி ஆசிஃப் அலியின் முகம் பரவலாகியது. இது, கடந்தாண்டு வரையிலான நிலவரம்.
இந்தாண்டு ஆசிஃப் அலியே இப்படி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு ஹிட் படத்தைக் கொடுத்து மலையாள சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
இதையும் படிக்க: விடுதலை - 2 டிரைலர் தேதி!
கிரைம் திரில்லர் பாணியில் உருவான தலவன் (thalavan), லெவல் கிராஸ் (level cross), முன்பின் அறியாத இருவரின் கதையான அடியோஸ் அமிகோ (adios amigo), சமீபத்தில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் என திரையரங்கில் ஒரு படம் வெற்றிப்பெற்று நீங்கியதும் அடுத்தப்படம் என வரிசையாக பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்துவிட்டார் ஆசிஃப்.
இந்த நான்கு படங்களிலும் ஆசிஃப் அலியின் கதாபாத்திரங்கள் முற்றிலும் வேறுவேறானவை. ஆணவம் சீண்டப்பட்டுக்கொண்டே இருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளாராக (தலவன்), மனநலம் பாதிக்கப்பட்ட கொலைகாரனாக (லெவல் கிராஸ்), முழுநேரக் குடிகாரனாக (அடியோஸ் அமிகோ), இழப்புகளால் தவிக்கும் மகனாக (கிஷ்கிந்தா காண்டம்) என அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளன. தனித்துவமான நடிப்பாற்றல் கொண்ட கலைஞர் என விமர்சகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.
இதில், கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் ரூ. 8 கோடி செலவில் உருவாகி ரூ. 80 கோடி வரை வசூலித்து அவர் வணிகத்தையும் உயரச் செய்திருக்கிறது. ஆச்சரியமாக, ஆசிஃப் அலியின் சம்பளம் ஒரு கோடி கூட இல்லையாம். தலவன் போல் ஒரு படத்தில் நடித்துவிட்டு லெவல் கிராஸ் போன்ற கதையை நம்மூர் ஆட்கள் தேர்ந்தெடுப்பார்களா? ம்ஹும்.
மலையாளத்திலிருந்து வந்த ஃபஹத் ஃபாசில் தென்னிந்தியளவில் கலக்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஆசிஃப் அலியும் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் யார் அவரை நடிக்க வைக்கப்போகிறார்கள் என்கிற ஆர்வமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இந்த தொடர் வெற்றியால் பல முன்னணி தயாரிப்பாளர்களும் ஆசிஃப் அலி தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு பெரிய பட்ஜெட்களைக் கொடுக்க முன்வந்துள்ளனராம்.
சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளைக் கொண்டு உருவான மனோரதங்கள் ஆந்தாலஜி தொடரின் டிரைலர் நிகழ்வில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண், நடிகர் அசிஃப் அலியிடமிருந்து விருதை வாங்க மறுத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது.
இதையும் படிக்க: ரமேஷ் நாராயணால் நடிகர் ஆசிஃப் அலி அவமதிக்கப்பட்டாரா? என்ன நடந்தது?
அப்போது, பலரும் ஆசிஃப் அலிக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர். அந்நிகழ்வுக்குப் பின் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் மலையாளத்தின் டாப் ஸ்டார் பட்டியலுக்குள் ஆசிஃப் அசாதாரணமாக நுழைந்தது ஆச்சரியமானதுதான்!