செய்திகள் :

Yashaswi Jaiswal : `மும்பையின் குடிசைவாசி டு பெர்த் Standing Ovation!' - எளியவனின் சரித்திர வெற்றி

post image
'இது கதைகள் உருவாக்கப்படுவதற்கான இடம், இது கதைகள் சொல்லப்படுவதற்கான இடம், இது கதைகள் பகிரப்படுவதற்கான இடம். இன்று நாம் இன்னொரு புதிய கதையை உருவாக்கி இங்கிருந்து உலகிற்கு பகிரப் போகிறோம்.' பூர்வக்குடிகளான நூங்கார் பழங்குடிகளின் இந்த கோஷத்துடன்தான் பெர்த் டெஸ்ட் தொடங்கியது. அவர்களின் வார்த்தைப் படியே பெர்த்தில் 'ஜெய்ஸ்வால்' தன்னுடைய ஆட்டத்தின் வழி எளியவனின் எழுச்சியாக ஒரு புதிய கதையை உருவாக்கியிருக்கிறார். அந்தக் கதையை கிரிக்கெட் உலகம் மொத்தத்தையும் கண்டு வியக்கவும் செய்திருக்கிறார்.
Jaiswal

நாளுக்கு நாள் புதிதாக பரிணமத்துக் கொண்டிருக்கும் பெர்த் பிட்ச்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்களை அடித்து இந்தியாவை வலுவான நிலையில் அமர்த்தியிருக்கிறார். அனுபவ வீரர்களே திணறும்போது 22 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக பயணித்து ஆடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் நிகழ்த்தியிருப்பது அசாத்தியம்.

முதல் இன்னிங்ஸில் பொறுமையே இல்லாமல் அவசரக்கோலத்தில் ஒரு ஷாட்டை ஆடி ஜெய்ஸ்வால் கல்லியில் கேட்ச் ஆன போது அத்தனை ஆத்திரமாக இருந்தது. திறமையிருந்து அதை சரியாக களத்தில் வெளிப்படுத்த மறுக்கிறாரா எனும் ஆதங்கம் எழுந்தது. ஆனால், மனதின் ஒரு ஓரத்தில் ஜெய்ஸ்வால் மீது ஒருவித நம்பிக்கையும் இருந்தது. அவரின் ஆரம்பக்கால வாழ்க்கையும் கிரிக்கெட்டுக்குள் அவர் மேற்கொண்டு வரும் பயணமும்தான் அந்த நம்பிக்கைக்குக் காரணம்.

உத்திரப்பிரதேசத்திலிருந்து கிரிக்கெட் ஆடுவதற்காக மூட்டை முடிச்சுகளோடு மும்பைக்கு ஜெய்ஸ்வால் கிளம்பிய போது அவருக்கு வெறும் 10 வயதுதான். ஜெய்ஸ்வாலின் தந்தை அவரை ஒரு உறவினரின் வீட்டில் ஒப்படைத்து சென்றுவிட்டார். ஒரு பால்க்காரரின் கடையில் வேலை செய்துகொண்டு படித்துக் கொண்டே கிரிக்கெட் ஆட வேண்டும். இதுதான் ஜெய்ஸ்வாலின் அன்றாடம். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் ஆட மற்ற விஷயங்களெல்லாம் இடையூறாக இருக்கவே எல்லாவற்றையும் உதறிவிடுகிறார். மும்பையிலுள்ள ஆசாத் என்கிற ஒரு கிரிக்கெட் மைதானத்தின் வெளியே மைதான பராமரிப்பாளர்கள் தங்கும் குடிசையிலேயே தங்கி இன்னும் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்கிறார்.

Jaiswal
'குடிசைல தங்கி ஆடுறது கஷ்டமா இருந்தா ஊருக்கு வந்துரு..' என பெற்றோர்கள் அழைக்க, 'இனி ஊருக்கு வருவதாக இருந்தால் ஒரு சாதித்த ப்ளேயராகத்தான் வருவேன்..' என அந்த வயதிலேயே உறுதியாக கூறியிருக்கிறார். அந்த உறுதிதான் பானிப்பூரி கடையில் வேலை பார்த்துக் கொண்டே அவரை கிரிக்கெட் ஆடவு ம் வைத்தது. பள்ளிகளுக்கு எதிரான போட்டிகளில் சாதித்து U19 கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி ஐ.பி.எல் இல் தடம்பதித்து மெதுமெதுவாக நகர்ந்து இப்போது இந்திய அணியில் இணைந்திருக்கிறார்.

கடினமான சூழல்கள் மட்டுமே உறுதியான மனிதர்களை உருவாக்கும். ஜெய்ஸ்வால் வீதியிலிருந்து வந்தவர். அவர் மனத்திடத்தை வலுவாக்கக் கூடிய எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரால் பெர்த்தில் நடு பிட்ச்சில் நின்று கொண்டு வேகம் தீர ஓடி வந்த ஸ்டார்க்கை நோக்கி 'உங்களின் வேகம் போதவில்லை...' என கூற முடிகிறது.

வறுமையின் பிடியிலிருந்து வந்த எல்லாருக்குமே வெற்றிக்கான பசி எப்போதுமே தீராது. ஒரு வெற்றி...ஒரு நிறைவான செயல் என இத்தோடு போதும் என எதுவுமே திருப்தியை கொடுக்காது. அடுத்தடுத்து வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கிதான் முழுக்கவனமும் இருக்கும். ஜெய்ஸ்வாலின் ஆட்டத்திலும் அணுகுமுறையிலும் இந்த குணாதிசயத்தை கண்கூடாக பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய அணி சென்னை வந்திருந்தது. நான்காம் நாளின் உணவு இடைவேளையின் போதே போட்டி முடிந்துவிட்டது. இரு அணியின் வீரர்களும் பேட்டிகளை கொடுத்துவிட்டு கலைய தொடங்கிவிட்டனர். ரசிகர்களுமே மைதானத்திலிருந்து கிளம்பிவிட்டனர். ஆனால், ஜெய்ஸ்வால் போட்டி முடிந்த 15 வது நிமிடத்தில் பேடை கட்டிக் கொண்டு ஒரு த்ரோவரோடு வலைப்பயிற்சிக்கு வந்துவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெறும் மைதானத்தில் அவர் மட்டுமே பயிற்சி செய்து வந்தார்.

Jaiswal

மைதானத்திலிருந்து கிளம்பிய அணியின் பேருந்தில் கடைசி ஆளாகத்தான் ஏறினார். இத்தனைக்கும் அந்த டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் நன்றாகத்தான் ஆடியிருந்தார். ஹசன் மஹமத் என்ற ஒரு பௌலர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்தியாவின் டாப் ஆர்டரை அவர் காலி செய்த போதும் ஜெய்ஸ்வால் மட்டும் பொறுமையாக நின்று பெரும்பாலான பந்துகளை லீவ் செய்து க்ளாஸாக ஒரு அரைசதம் அடித்திருப்பார். மைதானத்தில் நேரடியாக அந்த இன்னிங்ஸை பார்த்த போது அத்தனை நிறைவாக இருந்தது. ஆனால், ஜெய்ஸ்வால் அதிலெல்லாம் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. அதனால்தான் ஆள் அரவமற்ற மைதானத்தில் பேடை கட்டிக் கொண்டு பயிற்சிக்கு வந்தார்.

இந்த விஷயங்கள்தான் முதல் இன்னிங்ஸில் அவர் சொதப்பிய போதும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எதையோ செய்துவிடுவார் எனும் நம்பிக்கையை கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் அவரிடம் ஒரு அதீத ஆர்வம் இருந்தது. சீக்கிரமே ஒரு தீர்க்கமான ஷாட்டை ஆடி பௌலர்கள் மீது அழுத்தத்தை ஏற்ற வேண்டும் என நினைத்தார். அதனால்தான் எதிர்கொண்ட 8 வது பந்திலேயே தவறான ஷாட்டை ஆடி அவுட் ஆகி வெளியேறினார். தான் செய்த தவறை உணர்ந்து தன்னுடைய ஆட்டத்தை தகவமைத்துக் கொள்ள ஒரே ஒரு இரவே போதுமானதாக இருந்தது. முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனவர், இரண்டாவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸில் எந்த சிரமமும் இல்லாமல் சதத்தை நோக்கி முன்னேறினார்.

Jaiswal

நிதானத்தின் வழி மட்டுமே ஆஸ்திரேலிய பௌலர்களை எதிர்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து பந்துகளை லீவ் செய்து நிதானமாக நின்று ஆடினார். ரவுண்ட் தி விக்கெட், ஓவர் தி விக்கெட், திடீர் பவுன்சர், திடீர் யார்க்கர் என ஆஸ்திரேலிய பௌலர்கள் எப்படி மாறி மாறி வீசினாலும் ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஸ்டார்க், ஹேசல்வுட் இருவரின் அனுபவத்தையும் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 400 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இருவரும் ஆடியிருப்பார்கள். ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டுதான் டெஸ்ட்டில் அறிமுகமானார். அதிகபட்சமாக கிட்டத்தட்ட 30 டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடியிருப்பார்.

ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோரின் அனுபவத்தின் முன் ஜெய்ஸ்வால் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களை ஜெய்ஸ்வால் ஆளுமையோடு எதிர்கொண்ட விதம் இருக்கிறதே! அதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அதுவும் ஹேசல்வுட் பந்தில் சிக்சர் அடித்து சதத்தை எட்டிவிட்டு ஹெல்மட்டை கழட்டி இரு கைகளையும் மேலே உயர்த்திய அவர் கொண்டாடிய சித்திரம் பெரும் ஊக்கத்தை அள்ளிக் கொடுத்தது.

கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய பௌலர்கள் அந்த 22 வயது இளைஞனிடம் சரணடைந்தே விட்டனர். ஒரு கட்டத்தில் ஆப் சைடில் 7 பீல்டர்களையெல்லாம் வைத்து அட்டாக் செய்து பார்த்தனர். அப்போதும் எக்ஸ்ட்ரா கவரில் அடித்து அதகளப்படுத்தினார்.

Jaiswal

மிட்செல் மார்ஷின் பந்தில் 161 ரன்களில் அவர் அவுட் ஆகி வெளியேறிய போது ஒட்டுமொத்த பெர்த் ஸ்டேடியமும் எழுந்து நின்று கைத்தட்டியது. மும்பையில் மைதானத்தின் வெளியே குடிசையில் தங்கி கிரிக்கெட் ஆடிய சிறுவன் அவன் கனவுகள் அத்தனையும் சாத்தியப்பட்ட நிலையில் இருப்பதைப் போல தோன்றியது. ஆனால், பாருங்கள் அவர் இத்தோடு திருப்திப்பட்டுக் கொள்ளமாட்டார். இன்னும் உழைப்பார்... இன்னும் வியர்வை சிந்துவார்... இந்தத் தொடரின் ஆகச்சிறந்த வீரன் என பெயர் எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார். வாழ்த்துகள் ஜெய்ஸ்வால்!

AUSvIND: `நான் வந்துட்டேன்னு சொல்லு' அதிரடி கோலி; தடுமாறும் ஆஸ்திரேலியா- பெர்த் டெஸ்ட் Day 3 Report

பெர்த் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ஜெய்ஸ்வாலின் அசாத்திய இன்னிங்ஸ், கோலியின் சதம், நிர்ணயிக்கப்பட்ட பெரிய டார்கெட் என எல்லாமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. மூ... மேலும் பார்க்க

AUSvIND: `4.30 மணி நேர ஸ்டாண்டிங்; ராகுல் -ஜெய்ஸ்வால் கூட்டணி அசத்தல்!' -பெர்த் டெஸ்ட் Day2 Report!

பெர்த் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு விக்கெட் எதையும் இழக்காமல் வலுவான நிலையில் இருக்கிறது. இரண்டாம் நாளில் என்ன நடந்தது?Starcமுதல் ... மேலும் பார்க்க

IPL Mega Auction Live: நாளை நடைபெறுகிறது ஐ.பி.எல் மெகா ஏலம்..! - எப்போது, எங்கு, எதில் பார்க்கலாம்?!

ஐ.பி.எல் 18-வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக... மேலும் பார்க்க

Pant: `IPL ஏலத்தில் எந்த அணிக்குச் செல்லப்போகிறீர்கள்?' - நாதன் லயன் கேள்வி... பண்ட் பதிலென்ன?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. நாளை மறுநாள் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் (நவம்பர் 24, 25) தொடங்கவிருக்கிறது. இதில், டெல்லி அணியி... மேலும் பார்க்க

Aus vs Ind: `அஸ்வின், ஜடேஜாவை உட்காரவைத்து நிதிஷ் ரெட்டியை இறக்குவதா?' - கவாஸ்கர் கேள்வி

பார்டர் கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25 தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியிருக்கிறது. பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் சீனியர் ஆல்ரவுண்டர் அஷ்வின்... மேலும் பார்க்க

Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்... 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்த பார்டர் கவாஸ்கர் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது.காலச்சக்கரத்தில் இந்திய கிரிக்கெட்டின் பல முக்கியமான தருணங்களை பார்டர் கவாஸ்கர் தொடர் தாங்கி நிற்... மேலும் பார்க்க