“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!
Dhoni: அன்று தோனி சிந்திய கண்ணீர்... 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில் என்ன நடந்தது தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்த பார்டர் கவாஸ்கர் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது.
காலச்சக்கரத்தில் இந்திய கிரிக்கெட்டின் பல முக்கியமான தருணங்களை பார்டர் கவாஸ்கர் தொடர் தாங்கி நிற்கிறது. இந்தியாவின் மாபெரும் கேப்டனாக கொண்டாடப்பட்ட தோனியை டெஸ்ட்டில் ஓய்வை நோக்கி தள்ளியதும் பார்டர் கவாஸ்கர் தொடர்தான். 'போதும்...இதற்கு மேல் நம்மால் மூன்று பார்மட்களிலும் ஆடுவது சிரமம்..' என்கிற நிதர்சனத்தை தோனி 2014 பார்டர் கவாஸ்கர் தொடரில்தான் உணர்ந்தார். மெல்பர்ன் மைதானத்தின் ட்ரெஸ்ஸிங் ரூமில் தோனி கண்ணீரோடு இந்திய வெள்ளை உடையிலிருந்து விடைபெற்றதை ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அழுகையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித புரிதல் இருக்கிறது. சிலருக்கு அழுகை என்பது ஒரு அவமானம். சிலருக்கு அழுகை என்பது ஒரு விடுதலை. 'ஆண்களும் அழலாம். அழுகையை வெளிக்காட்டுவதில் எந்த அவமானமும் இல்லை..' என்பது சச்சினின் பாலிசி. சூழலின் கணத்தை பொறுத்து அழலாம் ஆனால் அந்த கண்ணீர் உலகின் கண்களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர் தோனி.
அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'MS Dhoni The Untold Story' படத்திலும் தோனியின் இந்த குணத்தை தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஒட்டுமொத்த படத்திலும் இரண்டு மூன்று இடங்களில் மட்டும்தான் தோனி அழுவார். அப்போதும் தன்னுடைய நண்பர்கள் கூட்டத்திலிருந்து விலகிச் சென்று யார் கண்ணிலும்படாத இடத்தை எட்டிதான் அழுதுவிட்டு வருவார்.
இயல்பிலேயே உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் நாட்டம் இல்லாத தோனி அடிக்கடி அழுததும் இல்லை. கிரிக்கெட்டில் அரிதினும் அரிதாக ஒரு சில சமயங்களில் மட்டுமே அழுதிருக்கிறார். அதிலும் எல்லாருக்கும் முன்பாக கண்ணீர் சிந்திய தருணங்களெல்லாம் ரொம்பவே குறைவு. அப்படிப்பட்ட தோனியை பார்டர் கவாஸ்கர் தொடர் இந்திய அணியின் அத்தனை வீரர்கள் மத்தியிலும் கண்ணிர் சிந்தி ஓய்வை அறிவிக்க வைத்தது.
2014-15 பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியில் காயம் காரணமாக ஆடியிருக்கவில்லை. கோலிதான் கேப்டனாக இருந்தார். அந்தப் போட்டியில் இந்தியா தோற்றிருக்கும். இரண்டாவது போட்டியில் தோனி வந்துவிடுவார். அப்போதும் இந்திய அணிக்கு தோல்விதான். மூன்றாவது போட்டி பாக்சிங் டே போட்டி. மெல்பர்னில் நடக்கிறது. தொடரை தக்கவைக்க இந்தியா வென்றே ஆக வேண்டும். ஆனால், இந்தப் போட்டியை இந்தியா டிரா மட்டுமே செய்ய முடிந்தது. இந்திய அணி அந்தத் தொடரை இழந்துவிட்டது. போட்டிக்குப் பிறகு தோனி வழக்கம்போல பேட்டிகளை கொடுக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு வருகிறார். எந்த சலனமும் இல்லை.
தோனி ஓய்வுப் பெறப் போகிறார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு திரும்புகையில் இந்திய அணியின் அப்போதைய மேனேஜர் பாபாவை அழைத்து இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசனுக்கு போன் போட்டுத்தர சொல்லியிருக்கிறார். அப்போதுதான் தோனி எதோ பெரிய முடிவை எடுக்கப்போகிறார் என லேசாக பொறி தட்டியது. என்.ஸ்ரீனிவாசனிடம் மனம் விட்டு பேசியவர், மீண்டும் பாபாவை அழைத்து ஒரு பெரிய டீம் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறார். தோனி எதோ சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார் என்கிற சந்தேகம் மேலும் வலுத்தது.
ஏனெனில், தோனி பெரியளவில் மீட்டிங் நடத்தி திட்டங்களை தீட்டும் கேப்டனெல்லாம் கிடையாது. அவர் உள்ளுணர்வின் செயல்படக்கூடியவர். அதனால் களத்தில்தான் வீரர்களுடன் அதிகம் பேசுவார். வழக்கமாக டீம் மீட்டிங்குகளில் வீரர்களின் கருத்தைக் கேட்கும் தோனி 'All Set Go...' என்பதை மட்டும்தான் சொல்லுவார். மீட்டுங்குகளும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு மேல் நீளாது. ஆனால், மெல்பர்னில் அந்த டிசம்பர் 30 அன்று அப்படியில்லை. வீரர்களையெல்லாம் அழைத்து அவர்கள் முன் ஒரு டேபிளை போட்டு அமர்ந்து தோனி பேச தொடங்குகிறார்.
இந்திய அணியுடனான தன்னுடைய பிணைப்பைப் பற்றி பேசியவர், ஒரு கட்டத்தில் தான் ஓய்வுபெறப் போவதை அறிவித்து பொளபொளவென அழத் தொடங்கினார். தோனியை அப்படி ஒரு நிலையில் எந்த வீரரும் அதற்கு முன் பார்த்ததில்லை. அங்கே சிந்தப்பட்ட கண்ணீர்த்துளிகள் இந்தியாவின் மாபெரும் கேப்டனான தோனியுடையது இல்லை. கரக்பூரில் டிக்கெட் கலெக்டராக வெள்ளைச் சட்டையில் கண்களில் கனவுகள் தேங்கி நிற்க இரயில்வே ஸ்டேஷனை சுற்றி வந்த இளம் தோனியின் கண்ணீர்த்துளி அது. தோனியைக் கண்டு இந்திய வீரர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். தோனியும் சக வீரர்கள் ஒவ்வொருவருடனும் செல்பி எடுத்துக் கொண்டு மெல்பர்னிலிருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் விடைப்பெற்றார்.
மெல்பர்னில் தோனி அந்த முடிவை எடுக்க நிறைய காரணங்கள் இருந்தது. 2008 லிருந்து 2014 வரைக்கும் தோனி ஒட்டுமொத்தமாக 398 போட்டிகளில் ஆடியிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் உலகில் வேறெந்த வீரரும் அவ்வளவு போட்டிகளில் ஆடியதில்லை. ஆடிய எல்லா போட்டிகளிலும் கேப்டன் வேறு. இந்த பணிச்சுமை அவருக்கு தலைவலியை கொடுத்தது. அவரது உடலும் ஒருக்கட்டத்தில் எதிர்வினையாற்ற தொடங்கியது. காயங்கள் ஏற்பட தொடங்கியது. அந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடாமல் தவிர்த்திருந்தார். மேலும், டெஸ்ட்டில் ஒரு காலத்தில் தோனிதான் இந்தியாவை நம்பர் 1 அணி ஆக்கினார்.
ஆனால், அப்படியே அவரால் நீட்டிக்க முடியவில்லை. 2011-14 இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி ஆடிய 22 வெளிநாட்டு டெஸ்ட்களில் 2 டெஸ்ட்களில் மட்டுமே இந்தியா வென்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் அணியை வழிநடத்திச் செல்ல அடுத்தத் தலைமுறை வீரராக கோலியும் தயாராக நின்றார். இதே ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியில் அணியை ஓரளவுக்கு நன்றாக வழிநடத்தியும் காட்டிவிட்டார். இதெல்லாம் சேர்ந்துதான் தோனியை மெல்பர்னில் அந்த திடீர் முடிவை எடுக்க வைத்தது. கோலிக்கு 2015 புத்தாண்டுப் பரிசாக இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைத்தது.
மெல்பர்னின் ட்ரெஸ்ஸிங் ரூமில் தோனி மனமுருகி அழுததை ஒரே ஒரு வீரர் மட்டும் தன்னுடைய மொபைலில் வீடியோ எடுத்திருந்தார். இந்திய அணியின் மேனேஜர் பாபா, தோனி என்கிற மாபெரும் தலைவன் இப்படியொரு உடைந்த நிலையில் இருக்கும் சித்திரம் வெளியே செல்லக்கூடாதென கூறி அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டார். ஆனாலும் அந்த கண்ணீரின் ஈரத்தை ஒவ்வொரு பார்டர் கவாஸ்கர் தொடரும் நியாபகப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...