Rain Alert : நவம்பர் 26, 27,28 கன மழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படியிருக்கும்?
தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மூன்று நாள்களுக்கு முன்பே அறிவித்திருந்தது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ 23) உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 26, 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஆரஞ்சு அலர்ட்:
நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையிலான நான்கு நாள்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு சென்னை மையம் முன்னெச்சரிக்கைக் கொடுத்திருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
நவம்பர் 22-ம் தேதி (இன்று) முதல் 28-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதால், மீனவர்கள் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
நவம்பர் 25-ம் தேதி
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 26-ம் தேதி
ஆரஞ்சு அலர்ட்: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
கனமழை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 27-ம் தேதி
கன முதல் மிக கனமழை: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
கனமழை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 28-ம் தேதி
கன முதல் மிக கனமழை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்பிருக்கிறது.