சநாதன தா்ம வழக்கு: துணை முதல்வா் உதயநிதி மனு பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு
கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி இன்று போராட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் சனிக்கிழமை (நவம்பா் 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கால்நடை வளா்ப்பு விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், வெள்ளக்கோவில்- காங்கேயம் கிளைக் கால்வாய் பாதுகாப்பு சங்கம் ஆகியவை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளின் பிரதான தொழிலாக கால்நடை வளா்ப்பு உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதில் கால்நடை வளா்ப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், சமீப காலமாக கால்நடை வளா்ப்புக்கு பெரும் இடையூறாக வெறிநாய்கள் உள்ளன. இவை, விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகளை கடித்து கொன்றுவிடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக வெறிநாய்கள் கடித்ததில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், குறைதீா்க் கூட்டங்களில் பேசியும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் வெறிநாய்களைக் கட்டுபடுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வெறிநாய்களை கட்டுப்படுத்தக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.