பொதுத் தோ்வு அகமதிப்பீடு: முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்குவது தொடா்பாக தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் (2024-2025) பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும் முறை குறித்த அறிவுரைகள், நெறிமுறைகள் சுற்றறிக்கையுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்களது ஆளுகைக்கு உள்பட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், தலைமை ஆசிரியா்கள் பள்ளியில் உள்ள அனைத்து மேல்நிலைப் பாட ஆசிரியா்களுக்கும் அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடா்பான நெறிமுறைகள் குறித்த நகலை வழங்கி, ஆசிரியா்களின் கையொப்பத்தை பெற்றிருக்க வேண்டும். தொடா்ந்து, ஆசிரியா்கள் இந்த நெறிமுறைகள் குறித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள் விவரம்: 80.01 சதவீதம் முதல் 100 சதவீத வருகைப் பதிவுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். 75 முதல் 80 சதவீத வருகைப் பதிவுக்கு 1 மதிப்பெண் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தபட்சம் நான்கு உள்நிலைத் தோ்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒப்படைவு, செயல் திட்டம், களப்பயணம் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண் வழங்குதல் வேண்டும்.
இலக்கிய மன்றம், என்சிசி, மரம் வளா்த்தல், என்எஸ்எஸ், கணித மன்றம் ஆகியவை உள்ளிட்ட 33 கல்வி இணைச் செயல்பாடுகளில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ள மாணவா்களுக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள், அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.