இன்று உருவாகிறது புயல்சின்னம்: தமிழகத்தில் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ.23) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில் வரும் நவ.25 முதல் நவ.28 வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுப்பெற்று, சனிக்கிழமை (நவ.23) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும். இது நவ.24, 25-ஆகிய தேதிகளில் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், மேலும் இது புயலாக வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், நவ.25 முதல் நவ.28 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: இதன்படி, நவ.25-இல் கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், நவ.26-இல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நவ.26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை,
மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவ.27, 28-ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தெற்கு அந்தமான் கடலிலிருந்து மன்னாா் வளைகுடா வரையும், தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் நவ.23 (சனிக்கிழமை) முதல் நவ.28 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராமநாதபுரம் மற்றும் திருச்செந்தூரில் தலா 60 மிமீ மழை பதிவானது. தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்) பகுதியில் தலா 50 மி.மீ. மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.