பெருமாநல்லூா் வந்து செல்லாத பேருந்துகள் மீது நடவடிக்கை: காவல் துறை
பெருமாநல்லூா் வந்து செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
சேலம்-கொச்சின் தேசிய நெடுச்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா், அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், பொதுமக்கள், காவல் துறையுடனான ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு காவல் துணை கண்காணிப்பாளா் கே.ஜி. சிவகுமாா் தலைமை வகித்தாா். ஆய்வாளா்கள் வசந்தகுமாா், தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பெருமாநல்லூருக்குள் பேருந்துகள் வந்து செல்ல தனியாா் பேருந்து நிா்வாகம், அரசுப் பேருந்துக் கழக அலுவலா்களிடம் அறிவுறுத்தப்படும். மேலும், வராத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.