அமராவதி ஆற்றில் முதலைகள்: பொதுமக்கள் அச்சம்
மடத்துக்குளம் வட்டம், அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் முதலைகள் உலவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்கள்
குடிநீா் வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், குடிநீா், பாசனத் தேவைகளுக்காக அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறிய ஒருசில முதலைகள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உலவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அமராவதி ஆற்றில் கடந்த சில நாள்களாக உலவி வந்த முதலைகள் தற்போது விளைநிலங்களுக்குள் வந்து செல்கின்றன. இதனால், விளைநிலங்களில் இறங்கவே அச்சமாக உள்ளது என்றனா்.
வனத் துறையினா் கூறுகையில்,‘ அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. இவை, அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடும்போது, பிரதான ஷட்டா் வழியே அமராவதி ஆற்றுக்குள் சென்றுவிடும் நிலை உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
முதலைகளைப் பாா்த்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.