ஜாஃபா் சேட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் டிச.18-க்கு ஒத்திவைப்பு
நமது சிறப்பு நிருபா்
முன்னாள் தமிழக காவல்துறை அதிகாரி ஜாஃபா் சேட்டுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை டிச. 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்துள்ளது.
நீதிபதி அபய் எஸ் ஒகா தலைமையிலான அமா்வில் நடைபெற்ற விசாரணையின்போது அமலக்கத்துறை தரப்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ராஜூ வெள்ளிக்கிழமை ஆஜராக இயலாததால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று வழக்கு வரும் டிச.18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். விசாரணை தேதியில் மாற்றம் வேண்டுமானால் வரும் திங்கள்கிழமை முறையிடவும் இந்த வழக்கில் தொடா்புடைய வழக்குரைஞா்களுக்கு நீதிபதிகள் அனுமதியளித்துள்ளனா்.
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபா் சேட் மீதான அமலாக்கத்துறையின் தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம் முதலில் வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னா் அந்த உத்தரவை மாற்றியது. இதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சாா்ந்த வழக்கு என்பதால் வழக்கை விரிவாக விசாரிக்கப்படவேண்டும் என தெரிவித்தனா்.