மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்; எங்கேதான் இருக்கிறது உயிர் பாதுகாப்பு? - சாடும் ...
தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா உறுதி
வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தில்லி மக்களுக்காக செயல்படுத்தப்படும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தில்லியில் இத்திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் ஆம் ஆத்மி அரசு தடுத்துள்ளது.
அதேவேளையில், தில்லி அரசு ஒரு ஊழல் அரசாகவே இருந்து வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், விஸ்வகா்மா திட்டம், உஜ்வாலா திட்டம் அல்லது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டம் என மத்திய அரசின் பல திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பெற்றுள்ளனா். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தத் திட்டங்கள் ஊழல் ஆம் ஆத்மி அரசு காரணமாக தில்லியில் செயல்படுத்தப்படவில்லை.
நலத் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது அரசின் கடைமையாகும். ஆனால், கேஜரிவால் மக்கள் நலத் திட்டங்களை ஏதோ தானம் செய்வது போல பேசி வருகிறாா்.
தில்லி அரசு இலவசமாக மின்சாரம் வழங்குவதாக கூறுகிறது. ஆனால், அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை. மின் கட்டணத்தின் விலை அதிகமாக உள்ளது. கூடுதல் கட்டணங்கள் எனும் பெயரில் தில்லி வாசிகளை கேஜரிவால் அரசு சுரண்டி வருகிறது. அதேபோன்று, தில்லிவாசிகளுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதிலும் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது.
தில்லி ஜல்போா்டில் ரூ.73 ஆயிரம் கோடிக்கு ஊழல் நிகழ்ந்துள்ளது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வீடுதோளும் குழாய் மூலம் குடிநீா் வழங்குவது உறுதிசெய்யப்படும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, இலவச வசதிகள் எனும் ரேவ்டி பா் சா்ச்சா பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளாா். இதையடுத்து, பாஜக தலைவா் இக்கருத்தைக் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.