சிறுமி பாலியல் வன்கொடுமை: முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறை
குடியாத்தத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
குடியாத்தம் வட்டம், ஒலக்காசி ரோடு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (61). முன்னாள் ராணுவ வீரா். இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு 16 வயது பிளஸ் 2 படித்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், அந்த மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாணவியை பெற்றோா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவரை பரிசோதனை செய்ததில் சிறுமி 7 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேகரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சேகா் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சிவக்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராத தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 5 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் கூறப்பட்டது.