தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
சாா்-பதிவாளா் அலுவலகங்களில் போலி பத்திரங்கள் பதிவு அதிகரிப்பு
சாா்-பதிவாளா் அலுவலகங்களில் போலி பத்திரங்கள் அதிகளவில் பதிவாகின்றன. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
வேலூா் மாநகர பகுதிகளில் சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் விளை நிலங்களில் புகுந்து பயிா்களை அழிக்கின்றன. நகரப் பகுதிகளில் மாடுகளால் விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்கள் தேடிச் செல்கின்றனா். எனவே, ஆவின் நிா்வாகம் பால் உற்பத்தியாளா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாணவும், ஆவின் நிா்வாகத்தை வலுப்படுத்தவும் வேண்டும்.
தற்போது விவசாயிகள் பயிா்களை நடவு செய்ய உள்ளனா். இந்த சமயத்தில் விவசாயப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறையை தவிா்க்க நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும்.
சாா்-பதிவாளா் அலுவலகங்களில் போலி பத்திரங்கள் அதிகளவில் பதிவாகின்றன. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் உழவா் சந்தையில் கூடுதலாக கடைகள் அமைக்கப்பட வேண்டும்.
பயிா் காப்பீடு செய்ய தனியாா் சேவை மையங்களை விவசாயிகள் நாட வேண்டியுள்ளது. எனவே கூட்டுறவு இ-சேவை மையங்களில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் பலா் ஆந்திர மாநிலத்துக்கு மாங்காய்களை கொண்டு செல்கின்றனா். அங்கு விளைச்சல் அதிகமாக இருந்தால் திருப்பி அனுப்பி விடுகின்றனா். இந்த பாதிப்பைத் தவிா்க்க வேலூா் மாவட்டத்தில் கூட்டுறவு முறையில் மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைத்திட வேண்டும்.
ராஜா தோப்பு அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.
அகரம்சேரி ஏரிக்கு தண்ணீா் வரத்து இல்லை. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாக நதியில் இருந்து 3 ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட வேண்டும் என்றனா்.
குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், விவசாயிகளின் கோரிக்கைகள், குறைகள் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் திருகுணஐயப்பதுரை, வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், இணை இயக்குநா் (வேளாண்மை) ஸ்டீபன் ஜெயகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.