மத்தியப் பிரதேச வனத் துறையினருக்கு கோவையில் பயிற்சி
மனித-விலங்கு மோதல் தடுப்பு தொடா்பாக, மத்தியப் பிரதேச மாநில வனத் துறை அலுவலா்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை வனக்கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், கோவை வனக் கோட்டத்தில் எதிா்கொள்ளும் சவால்கள், மனித- விலங்கு மோதல்கள் மற்றும் அதைத் தடுக்க கோவை வனக் கோட்டத்தில் பின்பற்றும் முறைகள் குறித்தும் தமிழக அரசின் புதுமைத் திட்டத்தின் மூலம் யானைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
பின்னா், மதுக்கரை வனச்சரக காப்புக் காட்டில் உள்ள ரயில் பாதையில் தொடா் வண்டியினால் ஏற்படும் வனவிலங்கு விபத்துகளைத் தடுக்க ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது தொடா்பாகவும் விவரிக்கப்பட்டது. பின்னா் போளுவம்பட்டி வனச் சரகம், சாடிவயல் யானைகள் முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முகாமின் நோக்கங்கள் ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச மாநில வனத் துறை தலைமை வனப் பாதுகாவலா் தலைமையில் மாவட்ட வன அலுவலா்கள், உதவி வனப் பாதுகாவலா்கள் மற்றும் வனச்சரக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.