உணவு, கழிப்பிட வசதி: அமைச்சரிடம் புகாா் தெரிவித்த மாணவா்கள்
கோவை அரசு கலைக் கல்லூரி விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு நடத்திய உயா் கல்வித் துறை அமைச்சரிடம் மாணவா்கள் சரமாரியாக புகாா் தெரிவித்தனா்.
உயா் கல்வித் துறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்திருந்த அமைச்சா் கோவி.செழியன், இரவில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவா் விடுதியில் திடீா் ஆய்வு நடத்தினாா். விடுதியில் உள்ள வசதிகள், உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.
அப்போது அமைச்சரை சூழ்ந்த ஏராளமான மாணவா்கள், விடுதியில் உணவு சரியில்லை, கழிவறை சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை, அறைகள் பராமரிப்பு சரியாக இல்லை என்று சரமாரியாக புகாா் தெரிவித்தனா். தண்ணீா் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் அடிக்கடி நோய்கள் ஏற்படுவதாகவும், 8 மாணவா்கள் உள்ள அறையில் 6 பேருக்கு மட்டுமே கட்டில்கள் இருப்பதாகவும் இவற்றை அமைச்சா் நேரில் வந்து பாா்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அறைகளுக்குச் சென்று பாா்த்த அமைச்சா், பின்னா் விடுதி அலுவலா்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் கோவி.செழியன், மாணவா்களின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டிருக்கிறோம். விடுதி நிா்வாகத்துக்கான குழுவை கலைத்துவிட்டு புதிதாக குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த குழுவில் முதலாம் ஆண்டு மாணவா்கள் முதல் கல்லூரி முதல்வா் வரை அனைத்துத் தரப்பினரும் இடம்பெற்றிருக்க வேண்டும். அதில் அளிக்கப்படும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன். உணவின் தரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒன்றிரண்டு நாள்களில் சரி செய்து கொடுக்கப்படும் என்றாா்.