Manipur: 10,000 மத்திய படையினர் குவிப்பு - என்ன சொல்கிறார் பாதுகாப்பு ஆலோசகர்?
மணிப்பூரில் குக்கி, மெய்தி மக்களுக்கு இடையிலான வன்முறை மீண்டும் உக்கிரமாக வெடித்திருப்பதால் மத்திய அரசு அங்கு கூடுதலாக 10,000 வீரர்களை அனுப்பவுள்ளது.
மணிப்பூர் மியான்மருக்கு அருகில் இருப்பதனால் மியான்மர் எல்லையில் உள்ள இந்திய இராணுவ கம்பனிகளின் எண்ணிக்கையை 288ஆக உயர்த்தப்பட்டுள்ளது என இம்பாலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
"நாம் கூடுதலாக 90 கம்பனி படைகளை பெறுகிறோம். இவற்றில் கணிசமான அளவு ஏற்கெனவே இம்பால் வந்து சேர்ந்துள்ளனர்." எனப் பேசியுள்ளார்.
மேலும், "பொதுமக்களின் உயிரையும் உடைமைகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளை கண்காணிக்கவும் படைகளை பிரித்து அனுப்புகிறோம். அனைத்துப் பகுதிகளும் சில நாட்களில் கவர் செய்யப்படும்.
மாவட்டம்தோறும் புதிய ஒருங்கிணைப்பு செல்கள் அமைக்கப்படும் மற்றும் கண்ட்ரோல் ரூம்கள் அமைக்கப்படும். பழைய கண்ட்ரோல் ரூம்களை ஆய்வு செய்ய உள்ளோம்" என்றும் கூறியுள்ளார்.
காவல்துறை, சிஆர்பிஎஃப், எல்லை பாதுகாப்புப் படை, இராணுவம், அஸ்ஸாம் ரைஃபில்ஸ், இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவலர்கள், சசாஸ்திர சீமா பால் என பல பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 7ம் தேதி பழங்குடியைச் சேர்ந்த பெண் மெய்தி ஆயுத குழுவால் கொல்லப்பட்டது மீண்டும் பெரிய அளவில் வன்முறை வெடிக்க காரணமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து ஜிரிபாம் பகுதியில் குக்கி ஆயுத குழுவுக்கு சிஆர்பிஎஃப் படையினருக்குமான மோதலில் 10 குக்கி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது கைக்குழந்தை உள்ளிட்ட 6 மெய்தி மக்களை குக்கி குழுவினர் பணயக்கைதியாக பிடித்துச் சென்றுள்ளனர். இன்று அந்த 6 பேரின் உடல்களும் ஆற்றின் அருகில் கண்டெடுக்கப்பட்டது.
மணிப்பூரின் பல பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் வன்முறை வெடிக்கும் அச்சம் நீடிக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...