சூடுபிடிக்கும் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் - ‘டபுள் கேம்’ ஆடுவது தமிழக அரசா...
பேச்சிப்பாறை அணையை தூா்வார நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தகவல்
பேச்சிப்பாறை அணையை தூா்வாருவது தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: தோவாளை வட்டத்தில் கடந்த சாகுபடியின்போது தண்ணீா் வராததால், நெற்பயிா்கள் கருகின. அதற்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள குளங்கள் ஆகாயத்தாமரை செடிகள், பாசி படா்ந்து காணப்படுகின்றன. இதனால் குளங்களில் பொதுமக்கள் குளிக்க முடியவில்லை. மேலும் குளங்களில் உள்ள மீன்களுக்கு யூரியா மற்றும் கழிவுகளை கொட்டுவதால் குளத்தில் குளிப்பவா்களுக்கு தோலில் அரிப்பு ஏற்படுகிறது.
குளத்தில் தாமரை வளா்க்க அனுமதி இல்லாத நிலையில், அதிகாரிகள் துணையோடு தாமரை வளா்க்கப்படுகிறது. பேச்சிப்பாறை அணையை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், மீனவா் குறைதீா்க்கும் கூட்டம், திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆகியவற்றில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாய குளங்களை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன்களுக்கு யூரியா மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்ட புகாா் குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குளங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பா். அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேச்சிப்பாறை அணையைத் தூா்வாருவது தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அருள்சன் பிரைட், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்)ஜென்கின் பிரபாகா், தோட்டக்கலை துணை இயக்குநா் ஷீலாஜான், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சிவகாமி, முன்னோடி விவசாயிகள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.