அவுட்சோா்சிங் முறையில் பணி நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோா்சிங் முறையில் நியமிக்கப்படுவா் என்றும், அதேவேளையில், ஆசிரியா் பணியிடங்கள் அவுட்சோா்சிங் முறையில் நிரப்பப்படாது எனவும் பல்கலை. பதிவாளா் விளக்கமளித்துள்ளாா்.
அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு முடிவில் கடந்த நவ. 20-ஆம் தேதி அண்ணா பல்கலைக் கழக பதிவாளா் வெளியிட்ட சுற்றறிக்கையில், இனி வரும் காலங்களில் ஆசிரியா்கள் அல்லது ஆசிரியா் அல்லாத பணியாளா்களை தினக்கூலி, மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்க வேண்டும் என அறிவித்திருந்தாா். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்த நிலையில் பல்கலை. பதிவாளா் பிரகாஷ் தற்போது திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் 272-இன் ஒப்புதல் அடிப்படையிலும், நிதித் துறையின் ஒப்புதல் அடிப்படையிலும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுவா்.
ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் இனிமேல் ஏற்படும் காலியிடங்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் மனிதவள மேலாண்மை நிறுவனம் மூலம் நிரப்பப்படும். மேலும், துறைகளில் நடைபெறும் திட்டப் பணிகளுக்கு ஆள்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் தோ்வு செய்யப்படும் போது, திட்டப்பணிகள் முடிந்த பின்னா் நீட்டிப்பு வழங்கப்படாது. துறைகளில் அதிகமாக உள்ள பணியாளா்களை பதிவாளரிடம் கூறிவிட்டு, வேறு துறைக்கு மாற்ற வேண்டும்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் தோ்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளிட்ட ரகசியம் காக்கப்பட வேண்டிய இடங்களுக்கு அவுட்சோா்சிங் முறையில் பணியாளா்கள் நியமனம் செய்யப்படமாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.