பௌன்சர்களை தோளில் வாங்கிக்கொள்; கௌதம் கம்பீரின் அறிவுரையை நினைவுகூர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி!
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குவற்கு முன்பாக கௌதம் கம்பீர் கொடுத்த அறிவுரையை அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டி நினைவு கூர்ந்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: 72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டி அதிகபட்சமாக 59 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
கௌதம் கம்பீரின் அறிவுரை
அறிமுகப் போட்டியிலேயே அசத்திய நிதீஷ் குமார் ரெட்டி, போட்டி தொடங்குவதற்கு முன்பாக கௌதம் கம்பீர் கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பெர்த் ஆடுகளம் குறித்து அதிகம் கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால், கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். பெர்த் ஆடுகளத்தின் பௌன்சர்கள் குறித்து அனைவரும் கூறியது எனது மனதுக்குள் இருந்தது. ஆனால், பயிற்சி முகாமின்போது கௌதம் கம்பீர் கூறியதை நினைவுப்படுத்திக் கொண்டேன். பௌன்சர் பந்துகளை எதிர்கொள்ள நேரிடும்போது, அதனை உனது தோள்களில் வாங்கிக்கொள் என கௌதம் கம்பீர் கூறினார்.
இதையும் படிக்க: 14 பந்துகளில் அரைசதம்: டி10 கிரிக்கெட்டில் அசத்தும் ஜோஸ் பட்லர்..!
மேலும், உனது நாட்டுக்காக குண்டுகளை வாங்கிக் கொள்வது போன்றது பௌன்சர்களை உனது தோளில் வாங்கிக்கொள்வது என்றார். அவரது அந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்தது. அவர் இந்த வார்த்தைகளை கூறியபோது, நாட்டுக்காக குண்டுகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். கௌதம் கம்பீர் எனக்கு கூறியதிலேயே மிகவும் சிறந்த அறிவுரையாக இதனைக் கூறுவேன் என்றார்.