நைஜீரியா, பிரேசில் பயணம்! தலைவர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய பிரதமர் மோடி!
BGT: `IPL `டு' பார்டர் கவாஸ்கர்' - ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் இடம் பிடித்தது எப்படி?
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் கடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு, இந்தத் தொடரை 4 - 0 அல்லது 5 - 0 என்ற கணக்கில் வென்று அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா களமிறங்கியிருக்கிறது.
இதில், ஷமி, புஜாரா போன்றோர் இல்லாமல் ரோஹித், கோலி, கே.எல். ராகுல், அஷ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஜெய்ஸ்வால், பண்ட், துருவ் ஜுரல், படிக்கல், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட பெரும் இளம் படையை இந்திய அணி கொண்டுசென்றிருக்கிறது.
அதனால், முதல் டெஸ்ட் போட்டியில் எந்தெந்த யார் யார் பிளெயிங் லெவனில் இடம்பெறப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஐ.பி.எல்லில் கவனம் ஈர்த்த பேட்டிங் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகமாகியிருக்கின்றனர்.
வேகப்பந்துவீச்சில் திரும்பிப் பார்க்க வைத்த ஹர்ஷித் ராணா!
2022 ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணியில் அறிமுகமான ஹர்ஷித் ராணா, அந்த சீசனில் மொத்தமாகவே 2 போட்டிகளில் களமிறங்கி ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். 2023 சீசனில் அதே கொல்கத்தா அணியில் 6 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், கடந்த சீசனில் கொல்கத்தா அணி இவர் மீது நம்பிக்கை வைத்து மிட்சல் ஸ்டார்க்குடன் பிரதான பவுலராகக் களமிறக்கியது. அந்த சீசனில் கொல்கத்தா தனது முதல் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்டது.
கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் 208 ரன்கள் குவித்து பவுலர்களிடம் வெற்றிப் பொறுப்பை ஒப்படைத்தது. மறுபுறம், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணியில், ஹென்றிச் கிளாசன் மட்டும் நங்கூரமாக நின்றார். ஐதராபாத் அணி 18 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளுக்கு 170 ரன்கள் எடுத்திருந்த வேளையில், ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் ஹென்றிச் கிளாசன் மூன்று சிக்ஸ் அடிக்க, அணியின் ஸ்கோர் 196 என உயர்ந்தது. கடைசி ஓவரில் ஹைதராபாத்தின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை, அதற்குத் தயாராக கிரீஸில் நின்ற கிளாசன் கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணா வீசிய முதல் பந்தை சிக்ஸராக்கி, அடுத்த 5 பந்தில் வெறும் 7 ரன்கள் தேவை என இலக்கை எளிதாக்கினார்.
இந்த இக்கட்டான சூழலில், மூன்றாவது பந்தில் ஷெபாஸ் அகமதுவையும், ஐந்தாவது பந்தில் அதிரடி வீரர் கிளாசனையும் வீழ்த்தி ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ஹர்ஷித் ராணா, அந்த சிக்ஸருக்குப் பிறகு 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, கொல்கத்தா அணியின் வெற்றிக் கணக்கைத் தொடங்கிவைத்தார். அந்தப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷித் ராணா, அந்த சீசனின் இறுதிப்போட்டியில் இதே ஹைதராபாத்துக்கு எதிராக ஆடியது உட்பட மொத்தமாக 11 ஆட்டங்களில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி, கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்காற்றினார்.
கடந்த செப்டம்பரில், துலீப் டிராபியில் இந்தியா D அணி சார்பில், இந்தியா A மற்றும் இந்தியா C அணிகளுக்கெதிரான ஆட்டத்தில் தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மேலும், அக்டோபரில் அஸ்ஸாம் அணிக்கெதிரான ரஞ்சிப் போட்டியில் டெல்லி சார்பில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திக்காட்டினார். அசால்டாக மணிக்கு 140 கி.மீ வீசக்கூடிய இந்த ஹர்ஷித் ராணாவை, பும்ரா, ஷமிக்கு பிறகு ஒரு வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என குரல்கள் ஒலித்தன. தற்போது, அந்தக் குரல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் அறிமுகமாகியிருக்கிறார் 22 வயது ஹர்ஷித் ராணா.
ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி!
கடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, ட்ராவிஸ் ஹெட், கிளாசன் ஆகிய பேட்ஸ்மேன்களுக்கு மத்தியிலும், நடராஜன், பேட் கம்மின்ஸ் ஆகிய பவுலர்களுக்கு மத்தியிலும் ஆல்ரவுண்டராக தனது இன்னிங்ஸ் மூலம் கவனம் ஈர்த்த 21 வயது இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி. 2023 ஐ.பி.எல் சீசனில் ஹைதராபாத் அணியில் அறிமுகமான நிதிஷ் குமார் ரெட்டி, அந்த சீசனில் 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார்.
அந்த சீசனில், ரன் கணக்கையும், விக்கெட் கணக்கையும் தொடங்காத இவர், கடந்த ஐ.பி.எல் சீசனில் இறுதிப்போட்டி உட்பட 13 போட்டிகளில் விளையாடி, பவுலிங்கில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியபோதிலும் பேட்டிங்கில் 303 ரன்கள் குவித்தார். குறிப்பாக, ராஜஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் அடித்து, ஐ.பி.எல்லில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தார்.
தன்னுடைய ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் மூலம் இந்திய அணியின் கதவைத் தட்டிய நிதிஷ் குமார் ரெட்டியை, கடந்த மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கியது இந்திய அணி. அந்தத் தொடரில் போட்டிகளில் விளையாடி, 90 ரன்கள் அடித்த 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
குறிப்பாக, அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் 34 பந்துகளில் 74 ரன்கள் அடித்ததோடு, பவுலிங்கில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர்களின் பட்டியல் இடம்பிடித்த நிதிஷ் குமார் ரெட்டி, பெர்த் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...