செய்திகள் :

மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

post image

மும்பை: பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியாதலும், அமெரிக்க சந்தைகளில் உறுதியான போக்கு நிலவியதாலும், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து சாதனை படைத்தது.

காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,062.4 புள்ளிகள் உயர்ந்து 79,218.19 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில், வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 557.35 புள்ளிகள் உயர்ந்து 23,907.25 முடிந்தது.

ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடி மற்றும் டெக் பங்குகள் ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் சந்தை உணர்வை மேலும் மேலும் இது அதிகரிக்க செய்தது.

இதையும் படிக்க: 2025ஆம் ஆண்டு பொது விடுமுறை நாள்கள் அறிவிப்பு: பொங்கல், தீபாவளி எப்போது?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்போசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ரியாலிட்டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இன்று உயர்ந்து முடிந்தது. நிஃப்டி-யில் பொதுத்துறை நிறுவன வங்கி பங்குகள் இன்று 2.47 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மீது லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்தும், பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியிலிருந்து மீண்டு உயர்ந்துவர்த்தகமானது.

இதையும் படிக்க: தனியார் நிறுவனங்களை வீழ்த்தி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்

அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.50 சதவிகிதமும், ஏசிசி பங்குகள் 3.17 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 2.16 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.05 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.18 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 0.65 சதவிகிதம் உயர்ந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (நேற்று) வியாழக்கிழமை ரூ.5,320.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,200.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்து முடிந்த வேளையில், ஷாங்காய், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.19 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.37 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.