Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா
சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் நவம்பர் 20 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நடிகர் நாகர்ஜூனாவும் அவரின் மனைவியும் நடிகையுமான அமலாவும் இந்த திரைப்பட திருவிழாவில் பங்கேற்றிருக்கின்றனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாகர்ஜூனா `கூலி' திரைப்படம் தொடர்பாகவும் `குபேரா' திரைப்படம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் `கூலி' திரைப்படத்தில் சைமன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், நாகர்ஜுனா.
கேள்விகளுக்கு பதிலளித்த நாகர்ஜுனா, `` லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறேன். அவர் `Gen Z' கிடையாது. இருந்தாலும் நான் அவரை `Gen Z' இயக்குநர் என்றுதான் சொல்வேன். அப்படியான இயக்குநர்தான் அவர். ஒரு புதிய வடிவிலான ஃபிலிம் மேக்கிங்கை அவரிடத்தில் நான் பார்க்கிறேன். அந்த புதிய வடிவம் கதாபாத்திர வடிவமைப்பிலும், திரைக்கதையிலும் இருக்கும். அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஒரு சுதந்திரம் இருக்கிறது.
படத்தின் ஹீரோ, வில்லன் கதாபாத்திரங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கமாட்டார். அவர் கொடுக்கிற சுதந்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினியுடன் `கூலி' திரைப்படத்தில் நடிக்கிறேன். மற்றொரு பக்கம் தனுஷுடன் `குபேரா' திரைப்படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் சேகர் கமுலா நிதர்சன வடிவத்தை அப்படியே பதிவு செய்யும் இயக்குநர். ஒரு புதிய வகையான ஃபிலிம் மேக்கிங்கை அவரிடத்திலும் உணர்கிறேன்." எனப் பேசியிருக்கிறார்.