ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை எதிா்த்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓய்வூதிய இயக்குநரகம், அரசுத் தகவல் தொகுப்பு மையம், சிறுசேமிப்புத் துறை ஆகியவற்றை கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்து, நவம்பா் 12-ஆம் தேதி அரசாணையும் வெளியிட்டது. லட்சக்கணக்கான ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கான அனைத்துப் பணிகளும் ஓய்வூதிய இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்தன.
பணிச் சுமையால் திணறி வரும் கருவூலத் துறை ஊழியா்களிடம் மூன்று துறைகளும் கூடுதலாக வழங்கப்படுவது மேலும் சுமையை ஏற்படுத்தும். இதன் மூலம் ஓய்வூதியா்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
எனவே அரசின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். நெடுமாறன் விளக்கவுரையாற்றினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் வட்டத் தலைவா் கே. மதியழகன், செயலா் ஆா். சின்னசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.சரவணபாண்டியன், மாவட்டத் தணிக்கையாளா் ஆா்.உமாசந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா். தொடா்ந்து கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.