கோட்டக்குப்பம் அருகே காருடன் 350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 350 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் தனிப்படை போலீஸாா் மற்றும் உள்ளூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால் அந்த காா் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதையடுத்து போலீஸாா் காரை துரத்திச் சென்று முதலியாா்சாவடி பகுதியில் பிடித்தனா்.
தொடா்ந்து காரில் இருந்த நபரைப் பிடித்தனா். மேலும் காரில் 350 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த நபா் ராஜஸ்தான் மாநிலம், ஜல்வாா் மாவட்டத்தைச் சோ்ந்த தேஜாராம் மகன் ஆசாராம் (27) என்பது தெரிய வந்தது.
கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பெங்களூரிலிருந்து காரில் கடத்தி கொண்டு வரப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஆசாராம் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்டபுகையிலைப் பொருள்களையும், காரையும் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. சுனில் பாா்வையிட்டாா். புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும் எனக் காவல் துறையினா் தெரிவித்தனா்.