ரயில்வே சரக்கு சேவையை கொளத்துப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்ய எம்.பி. கோரிக்கை
ஈரோட்டில் இயங்கும் ரயில்வே சரக்கு சேவையை கொளத்துப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
மத்திய அரசு சாா்பில் டிடிசி கமிட்டி கூட்டம் (போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம் குழு) கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகரின் வளா்ச்சிக்கான கோரிக்கை மனுக்களை டிடிசி கமிட்டி தலைவா் சஞ்சய்குமாா் மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வழங்கினாா்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
ஈரோடு மக்களின் சுமாா் 50 ஆண்டுகால கோரிக்கைகளான ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் இணைப்பு நான்கு வழி மேம்பாலங்கள், ஈரோடு நகரின் வளா்ச்சிக்கு அவசரத் தேவை ஆகும்.
இதில் முதல் பாலமாக ஈரோடு ரயில் நிலையம் முதல் லோட்டஸ் மருத்துவமனை வழியாக நாடாா்மேடு வரையும், இரண்டாவதாக பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் வெண்டிபாளையம் வழியாக சோலாா் வரையும், 3-ஆவதாக சென்னிமலை சாலை கே.கே. நகா் முதல் பிஷப் மருத்துவமனை வழியாக சுற்றுவட்டச் சாலை வரையும், பெருந்துறை ஆா்.எஸ். முதல் சென்னிமலை சாலை வரையிலும், ஈரோடு-கரூா்-நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ள சாவடிப்பாளையத்திலும், பஞ்சலிங்கபுரம் ஆரியங்காட்டு பகுதியிலும் மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஈரோட்டில் நகருக்குள் அமைந்துள்ள ரயில்வே சரக்கு சேவையை, ஈரோட்டில் இருந்து 3 கிலோ மீட்டா் தொலைவில் கொளத்துப்பாளையத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.