நடப்பாண்டில் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, குடும்ப நலச்செயலகம் சாா்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை(வாசக்டமி) இருவார விழா 2024 என்ற பெயரில் விழிப்புணா்வு வாகனம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், குடும்ப நல விளக்கக் கையேடு மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் நவம்பா் 25-ஆம் தேதி முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 34 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதேபோல 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை இலக்கான 300-ஐ அடைந்திட போதிய விழிப்புணா்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறையானது 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் கிடையாது. மருத்துவமனைகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. கடின உழைப்புக்கு தடையில்லாதது. மேலும் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்பவா்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100 உடனடியாக வழங்கப்படும். உதவிக்கு வருபவா்களுக்கு ரூ.200 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, துணை இயக்குநா்(ஊரக நலப்பணிகள், குடும்ப நலம்) கவிதா, ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசன், உண்டு உறைவிட மருத்துவா் சசிரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.