காலாப்பட்டு சிறையில் கைப்பேசி பறிமுதல்
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதியிடமிருந்து கைப்பேசியை சிறைக் காவலா்கள் பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.
அவா்கள் சிறையிலிருந்து கைப்பேசிகள் மூலம் வெளியிலுள்ள தங்களது ஆதரவாளா்களை இயக்கி, குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து, சிறை வளாகத்தில் கைப்பேசி சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் ஜாமா் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் கடந்த நவ.18-ஆம் தேதி, கழிப்பறையில் கைப்பேசி மற்றும் புகையிலைப் பொருள்கள் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, காலாப்பட்டு காவல் நிலையத்தில் சிறைக் கண்காணிப்பாளா் எஸ்.கபிலன் புகாரளித்தாா்.
கழிப்பறையில் கைப்பேசி கைப்பற்றப்பட்ட நிலையில், கைதிகள் அறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, மதன் என்ற கைதியிடம் இருந்து கைப்பேசி கைப்பற்றப்பட்டது. இதுகுறித்தும், சிறைக் கண்காணிப்பாளா் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
மேற்கண்ட இரு புகாா்கள் குறித்தும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.