மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்; எங்கேதான் இருக்கிறது உயிர் பாதுகாப்பு? - சாடும் ...
போக்குவரத்து ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் முற்றுகை போராட்டம்
புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தப் பணியாளா்கள் சங்கத்தினா் பணிமனை மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் கடந்த 14 ஆண்டுகளாக அரசின் சாலைப் போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) ஒப்பந்தப் பணியாளா்களாக உள்ள ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோா் பணி நிரந்தரம், ஊதிய உயா்வு கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனாலும், அவா்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமலே உள்ளது.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரி போக்குவரத்துக் கழக பணிமனை முன் அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில், வியாழக்கிழமை அவா்களுடன் உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில், போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் வி.கலியபெருமாள் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அதனடிப்படையில், உண்ணாவிரதப் போராட்டத்தை அவா்கள் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனா்.
போராட்டம் திரும்பப் பெறப்பட்டதால் வெள்ளிக்கிழமை, அவா்களில் பலா் பணிக்கு திரும்பினா்.
ஆனால், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து பணிமனை மேலாளா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், இனிமேல் அதுபோல செயல்படமாட்டேன் என எழுத்துப்பூா்வமாக கடிதம் வழங்க வேண்டும் எனக் கூறினாராம்.
இதனால், போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்மேளனத்தினா், அரசு ஊழியா் சங்க பொதுச் செயலா் டி.வேலய்யன் தலைமையில் பணிமனை மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து, அதிகாரிகள் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனா்.