இந்தியாவில் ஒரே ரயில்; 75 ஆண்டுகளாக இலவச பயணம்; எங்கே... ஏன் தெரியுமா?!
அட்டாக்கம்ஸ் ஏவுகணை Vs ஐ.சி.பி.எம். ஏவுகணை: உக்ரைனில் உலகப்போருக்கு ஒத்திகையா?
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஏதோ, பழைய காலத்து தியாகராஜ பாகவதர் திரைப்படம் போல, போர் இப்போது வெற்றிகரமாக ஆயிரம் நாள்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில்தான் உக்ரைன் போரில் இப்போது திடுக்கிட வைக்கும் பல புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதுநாள் வரை இல்லாத அளவுக்கு, இந்த திடீர் திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டது ஒரு நவீன ரக ஏவுகணை. அதன் பெயர் ஏ.டி.ஏ.சி.எம்.எஸ். ‘அட்டாக்கம்ஸ்’ (தாக்கு அவர்களை!) என்பது இந்த ஏவுகணையின் செல்லப் பெயர்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையைப் பூட்டி சாவியை புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தந்துவிட்டுப் போக வேண்டிய ஜோ பைடன், இந்த நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைன் நாட்டுக்கு அனுமதி தந்ததுதான் புதிய திருப்பங்களுக்குக் காரணம்.
உக்ரைன் போர் தொடங்கிய நாள் முதலே உக்ரைன் நாடு பல மேற்கத்தியத் தயாரிப்பு ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் 165 கிலோ மீட்டர் (100 மைல்) தொலைவு வரை பாயக்கூடிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியது. டிரோன்களையும் அதிகளவில் போரில் ஈடுபடுத்தியது. ரஷியாவின் தலைநகரமான மாஸ்கோ கூட ஒருமுறை உக்ரைன் நாட்டின் டிரோன் தாக்குதலுக்குத் தப்பவில்லை.
ஏவுகணைகள் வரிசையில் அடுத்தகட்டமாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் கூட்டுத் தயாரிப்பான, ஸ்கால்ப் எனப்படும் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டன. ஸ்கால்ப் எனப்படும் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை, 250 கிலோ மீட்டர் அதாவது 155 மைல் தொலைவு வரை பாயக்கூடியது. ரஷியாவின் குர்ஸ்க் பகுதி, டான் ஆற்றின் மீது அமைந்துள்ள ரோஸ்டோவ் நகரம், மில்லரோரா உள்பட பல ரஷிய நகரங்கள் இப்போது இந்த ஏவுகணையின் தாக்குதல் வளையத்துக்குள் உள்ளன.
இந்தநிலையில்தான், இன்னும் புது வரவாக 2022 ஜூலையில், ‘அட்டாக்கம்ஸ்’ எனப்படும் ஏ.டி.ஏ.சி.எம்.எஸ். ஏவுகணை உக்ரைனுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணையான அட்டாக்கம்ஸ் 306 கிலோ மீட்டர் (190 மைல்) தொலைவுக்குப் பாயக்கூடியது.
இதையும் படிக்க: அடேங்கப்பா அமெரிக்க அதிபர்கள்!
ஆக, இது கிட்டத்தட்ட ரஷியாவின் தலைநகரமான மாஸ்கோவை நெருங்கக் கூடியது. அட்டாக்கம்ஸ் ஏவுகணையை இரண்டு வகையாகப் பயன்படுத்த முடியும். ஒன்று 225 கிலோ எடையுள்ள ஒற்றைக்குண்டைப் பொருத்தி எதிரியின் தளத்தைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்தலாம். அல்லது கிளஸ்டர் எனப்படும் கொத்துக்குண்டுகளை இந்த ஏவுகணையில் பொருத்தியும் தாக்குதல் நடத்தலாம். இந்த கொத்துக்குண்டுகளில் சில உடனடியாக வெடிக்கும். சில குண்டுகள் வெடிக்காமல் கிடந்து தவணை முறையில் காலத்துக்குக் காலம் அவ்வப்போது மறைந்திருந்து வெடித்து களேபரத்தை ஏற்படுத்தும்.
மிகப்பெரிய பரப்பிலான விமானப்படைத் தளங்கள், ராணுவ முகாம்கள், போர்க்களங்களில் ஏ.டி.ஏ.சி.எம்.எஸ். ஏவுகணையைப் பயன்படுத்தி பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த முடியும். 1991ஆம் ஆண்டு இராக் நாட்டுக்கு எதிரான வளைகுடா போரிலும், லிபியாவுக்கு எதிரான போரிலும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஏவுகணை இது. வித்தியாசமான அதிவேகத்தில் வித்தியாசமான கோணத்தில் அட்டாக்கம்ஸ் பாயக்கூடியது. அதனால் இதை இடைமறித்து சுட்டுவீழ்த்துவது கடினம்.
சரி, 2022ல் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியிருக்கிறதா? அமெரிக்கா இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு ஏற்கெனவே தந்திருந்தாலும், ரஷிய நிலப்பரப்பில் இந்த ஏவுகணைகளை வைத்துத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்தநிலையில், ரஷியாவின் ஆக்ரமிப்பில் உள்ள கிரிமியா தீபகற்ப பகுதியில், கடந்த ஏப்ரல் மாதம், உக்ரைன் இரண்டு முறை இந்த ஏவுகணையைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கிரிமியா என்பது உக்ரைனின் நிலப்பரப்பு என்ற ஹோதாவில் நடத்தப்பட்ட தாக்குதல் அது.
‘இந்தநிலையில், அட்டாக்கம்ஸ் ஏவுகணை மீதான தடையை நீக்கி, இனி ரஷிய நிலப்பரப்பின் மீதும் இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் இசைவு வழங்கியதுதான் பரபரப்புக்கான ஆரம்ப காரணம்.
அமெரிக்காவின் இந்த முடிவை உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றிருந்தார். ‘சொற்களால் தாக்குதல் நடத்த முடியாது. இந்த ஏவுகணைகள் தங்களுக்காக தாங்களே பேசக்கூடியவை’ என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு மறுபுறமாக ரஷியத் தரப்பு, இந்த ஏவுகணை அனுமதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?
அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷிய நிலப்பரப்பைத் தாக்க அமெரிக்கா அனுமதி அளித்ததை அடுத்து, அதன் எதிர்வினையாக, உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அதிரடியாக அனுமதி அளித்து அதிர வைத்தார் ரஷிய அதிபர் புதின்.
அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை அமெரிக்க வல்லுநர்களின் உதவியில்லாமல் உக்ரைன் ராணுவத்தால் இயக்க முடியாது என்ற நிலையில், ‘அமெரிக்க ராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள், ரஷியாவுடன் இனி நேரடி போரில் ஈடுபடுவதாகப் பார்க்கப்படும்’ என்றும் புதின் உறுமியிருந்தார்.
ரஷிய செய்தி நிறுவனமான டாஸ், இந்த ஏவுகணை பிரச்னையை, ‘மூன்றாம் உலகப் போரைத் தொடங்கி வைப்பதற்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய அடிவைப்பு’ என்று வர்ணித்தது. ‘நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் மிக விரைவில் கடும் வலியை உணர்வார்கள்’ என்று ரஷிய நாளிதழான ரோசியாஸ்கயா காஸெட்டி எச்சரித்தது.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் இதுபற்றி எதுவும் கருத்து கூறாத நிலையில், ஜூனியர் டிரம்ப் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தார். ‘அமெரிக்க ராணுவ கட்டமைப்பான பெண்டகன் எடுக்க வேண்டிய முடிவு இப்போது ராணுவத் தொழில்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என்று அவர் எச்சரித்திருந்தார்.
இதுவரை காலமும் அமெரிக்கத் தயாரிப்பு அல்லாத கொஞ்சம் மென்மையான ஏவுகணைகளையே உக்ரைன் போரில் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது முதன் முறையாக அமெரிக்கத் தயாரிப்பு அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா மீது சுடச்சுட ஒரு தாக்குதலை உக்ரைன் நடத்தியிருக்கிறது. ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்குப் பதிலடியாக வரலாற்றில் முதன்முறையாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் 9 ஐ.சி.பி.எம். ரக ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மத்தியப் பகுதி நகரமான நிப்ரோவை ரஷியா தாக்கியிருக்கிறது. ரஷியாவின் அஷ்ட்ரக்கான் பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இவை அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகள் என்றாலும் அணுக்குண்டுகளுக்குப் பதிலாக மரபார்ந்த வெடிகுண்டுகளைப் பொருத்தி ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்! இழுபறியில் இறுதிக்கட்டம்!
கூடவே தம்போவ் பகுதியில் பறந்த ஒரு மிக்-31கே போர் விமானத்திலிருந்து ஒலியை மிஞ்சும் வேகத்தில் பாயக்கூடிய ஏழு கேஎச் 47 எம்2 ரக ஏரோ பலிஸ்டிக் ஏவுகணைகளையும், கேஎச்-101 ரகத்தைச் சேர்ந்த 7 குரூய்ஸ் ரக ஏவுகணைகளையும் ரஷியா பயன்படுத்தித் தாக்குதல் தொடுத்திருக்கிறது.
இவற்றில் குரூய்ஸ் ரக ஏவுகணைகளில் சிலவற்றை மட்டும் உக்ரைன் இடைமறித்து சுட்டு வீழ்த்தியிருக்கிறது. மற்றபடி ஐ.சி.பி.எம். ஏவுகணைகள் மூலம் நிப்ரோ நகரத்தில் ஏற்பட்ட சேதவிவரம் வெளிவரவில்லை. இதனிடையே, ரஷியா ஐ.சி.பி.எம். ரக ஏவுகணைகள் எதையும் பயன்படுத்தவில்லை. ஆர்.எஸ்.-26:ரூபெஸ் என்ற இடைத்தொலைவு பலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியிருக்கிறது என மேலை நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. ஆனால், ஆர்.எஸ்.-26:ரூபெஸ் ஏவுகணைகளும் அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லக்கூடிய அதிதிறன் வாய்ந்த ஏவுகணைகள்தான்.
சரி, ‘உக்ரைன் தற்போது அமெரிக்கத் தயாரிப்பு அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதால் போரில் ஏதேனும் பெரிய மாற்றம் வருமா? இதனால் மூன்றாம் உலகப் போர் மூள வாய்ப்புண்டா?’ என்றால் இல்லை என்கிறார்கள் போரியல் வல்லுநர்கள்.
ரஷியா அதன் விமானப்படைத் தளங்கள், ஆயுத தளவாடங்களை ஏற்கெனவே உக்ரைனுக்கு அப்பால், இந்த ஏவுகணை தொட முடியாத தொலைவில் கொண்டுபோய் வைத்திருக்கிறது. அட்டாக்கம்ஸ் ஏவுகணை மூலம் ரஷியாவின் விமானத் தாக்குதல்களைக் கொஞ்சம் குறைக்கலாம். ரஷியாவுக்கு சற்று செலவை அதிகப்படுத்தலாம். ஆனால் உக்ரைன் போரில் ரஷியாவை இந்த ஏவுகணையால் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது’ என்கிறார்கள் வல்லுநர்கள்.
‘ஒருவேளை இந்த ஏவுகணைகள் உக்ரைன் போரில் சிறிய மாற்றத்தைக் கொண்டு வரலாமே தவிர, உக்ரைனுக்கு வாய்ப்பாகப் போரைத் திசைதிருப்ப இந்த நவீன ஏவுகணையால் முடியாது’ என்ற கருத்தும் போரியல் வல்லுநர்களிடம் உள்ளது.
இதையும் படிக்க: ஆபரேசன் இரும்பு வாள்கள்! காஸா - இஸ்ரேல் போர்க்கள சிக்கலின் பின்னணி என்ன?
‘உக்ரைனுக்கு எத்தனை அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. அது தெரிந்தால்தான் போரில் இந்த ரக ஏவுகணை எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியும். தவிர, இந்த ஏவுகணையை ஆரம்பத்தில் தந்திருந்தால் உக்ரைன் போர் ஒருவேளை திசைதிரும்பியிருக்கும். ஆனால் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி இந்த ஏவுகணை தரப்பட்டிருக்கிறது’ என்ற கருத்தும் இருக்கிறது.
‘போர் என்பது தனித்தனி துண்டுகளைப் பொருத்தி ஒன்றாகச் சேர்க்க வேண்டிய ஒரு புதிர் விளையாட்டு. அந்த புதிர் விளையாட்டில் மிக நீண்ட தொலைவு பாயும் ஏவுகணை என்பது ஒரு சிறிய துண்டுதான். அதை மட்டுமே வைத்து போரில் வெற்றி பெற்றுவிட முடியாது’ என்பது இன்னும் சிலரின் கணிப்பாக இருக்கிறது.
சரி, இந்த ஏவுகணையை வைத்து உக்ரைன் வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறது?
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் குர்ஸ்க் பகுதிக்குள் உக்ரைன் ராணுவம் அதிரடியாகப் புகுந்து ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியைக் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த குர்ஸ்க் பகுதியை மீட்க 50 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷியா களமிறக்கி விட்டுள்ளது. இவர்களில் 12 ஆயிரம் பேர் வடகொரிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த குர்ஸ்க் பகுதி மீதும் வடகொரிய ராணுவத்தின் மீதும் உக்ரைன், அமெரிக்க அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை அதிகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. கிரிமியா தீபகற்பத்தையும், ரஷியாவையும் இணைக்கும் கெர்ச் பாலத்தையும் இந்த ஏவுகணையை வீசி உக்ரைன் தகர்க்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நேட்டோ நாடுகளின் உதவியின்றி உக்ரைனால் தனித்து இந்த அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை இயக்க முடியாது என்ற நிலையில், இந்த ரக ஏவுகணையை ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து பயன்படுத்தினால், அது நேட்டோ நாடுகள் ரஷியாவுடன் நேரடி மோதலில் ஈடுபடுவதற்குச் சமம். அதன்மூலம் ஒருவேளை பதற்றம் அதிகமாகி மூன்றாம் உலகப்போர் வெடிக்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது.