60 ஆண்டுகளில் முதல்முறையாக... எதிர்க்கட்சித் தலைவரைக் கொடுக்காத மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. இத்தேர்தல் முடிவுகளால் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 288 பேர் கொண்ட சட்டமன்றத்தில் 28 உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சி இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க முடியும். ஆனால் தற்போது மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வில் அதிக பட்சமாக 20 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 16 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மூன்று கட்சிகளும் இணைந்தால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியும். ஆனால் சட்டப்படி மூன்று கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது.
மகாராஷ்டிரா வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டதில்லை. இதற்கு முன்பு 1962, 67ம் ஆண்டுகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனால் அந்த ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டது. தேர்தல் முடிவுகளால் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கும் சரத் பவார், சிவசேனா(உத்தவ்)வின் சஞ்சய் ராவுத், பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் மீண்டும் மாநிலங்களவைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவையிலும் கடந்த 2019ம் ஆண்டு இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது.
எதிர்க்கட்சி அந்தஸ்து பெற காங்கிரஸ் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேவையான இடங்களில் வெற்றி பெறவில்லை. சரத் பவார் ஏற்கெனவே இனி ராஜ்ய சபா தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் நாசிக்கில் 3 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. புனேயில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஆளும் மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. நாக்பூரில் மொத்தமுள்ள 12 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது.