16 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது... நீளும் பட்டியலால் அதிர்ச்சி!
வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் குடியேறி, கூலி தொழில் செய்து பிழைத்து வரும் தம்பதியின் 16 வயதான 10 வகுப்பு மகள் கடந்த 10 - ம் தேதி மாயமானார். காவல்துறையில் புகார் அளித்து தேடப்பட்டு வந்த நிலையில், 3 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கிறார் அந்த சிறுமி. முகநூலில் நண்பராக அறிமுகமான நபர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்... நட்பாக பழகிய பலரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக 7 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை கைது செய்துள்ளனர்.
கைது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சமயங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். சிறுமியை சீரழித்த வழக்கில் ஹரிஷ், பிரவீன், பிரேம்குமார், அஜித்குமார் ஆகிய நான்கு பேரை ஏற்கனவே கைது செய்திருந்தோம்.
இந்த கொடூரத்தை செய்த வழக்கில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (27), தமிழ் (24) ஆகிய 2 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். தலைமறைவாக உள்ள காஜா என்ற நபரை தேடி வருகிறோம். இவர்கள் பட்டியலில் மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.