கனடாவை கடனாக்கிவிட்டு பிரதமர் நடனமாடுகிறார்! மக்கள் ஆவேசம்!
கனடாவில் வன்முறைகளுக்கிடையே டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியில் பிரதமர் ட்ரூடோ கலந்து கொண்டது பேசுபொருளாகி உள்ளது.
கனடாவில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த நிலையில், கனடாவின் இரண்டாவது பெரிய நகரமான மாண்ட்ரீலில் வெள்ளிக்கிழமையில் (நவ. 22) ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைப்பதாகவும், காவல்துறையினர் மீது வெடிபொருள்கள் வீசியும் போராட்டம் நடத்துவதாக செய்தி நிறுவனம் கூறுகிறது. மேலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உருவ பொம்மையையும் எரித்துள்ளனர்.
இந்த நிலையில் வன்முறை நடந்த அதே நாளில், பிரபல பாப் சூப்பர் ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட் நடத்திய இசை நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொண்டு கொண்டாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க:வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!
நாட்டில் வன்முறை சமயத்தில் பிரதமர் இசை நிகழ்ச்சியைக் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது என்று அந்நாட்டினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ``ரோம் நகரம் எரிந்தபோது, மன்னர் நீரோ கவிதை வாசித்ததுபோல, நாட்டின் கடனை 1.2 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாக்கிவிட்டு, ட்ரூடோ நடனமாடுகிறார்’’ என்று விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கனடாவில் கடும் நிதி நெருக்கடி நிகழ்வதால், கனடா கண்ட மோசமான பிரதமர் என்று ஜஸ்டின் ட்ரூடோவை அந்நாட்டினர் சிலர் கூறுகின்றனர்.
இருப்பினும், இசை நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டது, அவரது குடும்பப் பயணம் என்று பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாண்ட்ரீலில் நடந்த வன்முறைக்கு சனிக்கிழமை (நவ. 23) பிரதமர் ட்ரூடோ கண்டனம் தெரிவித்தார்.