பணிக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி காவலர் விபத்தில் சிக்கி பலி; ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் விமலா. இவருக்கு திருமணமாகி ஏற்கெனவே ஒரு மகன் உள்ளார். மேலும், தற்போது அவர் ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், இவர் பள்ளத்துபட்டியில் உள்ள தனது வீட்டிலிருந்து இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மண்டையூர் காவல் நிலையத்திற்கு பணிக்குச் சென்றார். அப்போது எதிரே வந்த கார் விமலாவின் இரு சக்கர வாகனத்தின் மீது கடுமையாக மோதியது. இதில், விபத்துக்குள்ளானதில் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மண்டையூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சோக சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர், பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் ஒருவர் கார் மோதி பலியான சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.