'அண்ணாமலைக்கு வரவேற்பா?' - கொந்தளித்த BJP சீனியர்கள்! | Cyclone Fengal | Seeman ...
Tiger: காட்டின் தலைமகன்; வனத்தின் காவலன்; ஆனால், கூச்ச சுபாவி...புலிகளின் இயல்புகள் தெரியுமா?
புலி ஒரு கூச்ச சுபாவியான விலங்கு. அது மனிதனைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடும். அப்படிப்பட்ட புலிகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, வேறு வழியில்லாமல் அவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. விளைவு, மனிதனோ அல்லது புலியோ, இருவரில் ஒருவர் இல்லாமல் போய் விடுகிறார்கள். இப்படித்தான் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் அருகில் உள்ள தட்டக்கொள்ளி பகுதியில் 3 வயதான ஆண் புலி ஒன்று, இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. புலிகளின் இயல்புப்பற்றி சுற்றுச்சூழல், வனவிலங்குகள் தொடர்பான ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள எழுத்தாளரும் சுற்றுச்சூழல் பரப்புரையாளருமான கோவை சதாசிவத்திடம் பேசினோம்.
ஒரு புலியின் மரணத்தை ஒரு வனவிலங்கின் மரணம் என கடந்து போய்விட முடியாது. புலி காட்டின் தலைமகன். வனத்தின் காவலன். புலியின் உறுமல்தான் காட்டின் மொழி. புலி வாழ்கிற காடுகள் வளமாக இருக்கும். அங்கு மான்கள் போன்ற தாவர உண்ணிகள் இருக்கும். அவை வாழ புல்வெளிகள் இருக்கும். புல்வெளிகள் இருந்தால், பெய்யும் மழைநீரை சேகரித்து வைக்கும் ஓடைகளும் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல், புலி வாழ்கிற காடுகளுக்குள் மனிதர்கள் செல்ல மாட்டார்கள். மனிதர்கள் செல்லாத காடுகள் அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆக, ஒரு புலியின் இறப்பு என்பது, அது வாழ்ந்த சில சதுர கி.மீட்டர் நிலப்பரப்புக்கான இழப்பு என்று அர்த்தம். புலிகள்தான் உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை. புலி இல்லையென்றால், தாவர உண்ணிகள் பெருகி, அதனால் தாவரங்கள் அழிந்து, கூடவே ஓடைகள் மறைந்து, நமக்கு வர வேண்டிய நீர்வரத்துக் குறையும். அதனால்தான், எங்கோ மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்துவிட்டால், டெல்டா பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கு தண்ணீர் வராது என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்.
தற்போது புலிகள் வாழ்கிற காடுகளுக்கு மிக அருகாமையில் மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டு விட்டார்கள். கூடவே, புலிகள் தாங்கள் வசிக்கிற பகுதிக்கு வராமல் இருக்க, மின்வேலி வைப்பது, அதன் உணவில் விஷத்தை வைப்பதெல்லாம் அறிவான செயலும் அல்ல, ஆரோக்கியமான செயலும் அல்ல... மனிதன் காடுகளின் பரப்பளவை சுருக்கிக்கொண்டே செல்கிறான். விளைவு, புலிகள் மனிதர்களுக்கு மிக அருகில் வந்து தங்களுடைய உயிரை இழந்து விடுகிறது அல்லது எதிர்ப்படும் மனித உயிர்களைப் பறித்து விடுகிறது.
இது புலிகளின் இனப்பெருக்க காலம். அதனால், புலிகள் தனக்கான இணையைத் தேடி பயணிக்கும். அதுபோகிற வழியில் மின்சார வேலியோ, சுருக்கு வலையோ, விஷ மாமிசமோ இருந்தால், காட்டின் காவலாளிகளான புலிகளின் உயிருக்கு எந்தக் காவலும் இல்லாமல் போய்விடும்.
புலி என்பது காட்டில் தனித்து வாழ்கிற ஒரு விலங்கு. ஒவ்வொரு புலியும் தனக்கென்று சில சதுர கி.மீட்டர் தூரத்தை தன்னுடைய வாழ்விடமாக காட்டில் வைத்திருக்கும். தன்னுடைய வாழ்விடத்தில் பெருகிற தாவர உண்ணிகளின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்து, காட்டின் சமநிலை சீர்குலையாமல் பார்த்துக்கொள்ளும். தன்னுடைய வாழ்விட எல்லையை புலிகள் எப்படி நிர்ணயிக்கும் என்பது தெரிந்தால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சிறுநீர் கழித்தும், மரங்களில் நகங்களால் கீறியும் தனக்கான எல்லைகளை ஆண் புலிகள் நிர்ணயிக்கும். ஓர் ஆண் புலியின் எல்லைக்குள் இன்னோர் ஆண் புலி வராது. ஆண் புலி ஒரு பெண் புலியுடன் இணை சேர்வதற்கு முன்னால், இன்னோர் ஆண் புலி இடை நுழைந்தால் அதனுடன் சண்டையிட்டு, அதை விரட்டிவிட்டுதான் இணை சேரும். பெண் புலி குட்டிகள் ஈன்றவுடன், அதற்கு பாதுகாப்பாக ஆண் புலி இருக்கும். ஆண் புலிகள் தங்கள் சர்வைவலுக்காக ஒரு யுக்தியை செய்யும். அதாவது, மற்ற ஆண் புலிகளுக்குப் பிறந்த ஆண் குட்டிகளைக் கொன்று விடும். எதிர்காலத்தில் தனக்கு வாழ்விட போட்டி வராமல் இருப்பதற்காக வளர்ந்த ஆண் புலிகள் இப்படி செய்யும். ஆண் புலிகளின் இந்த யுக்தியை வெல்வதற்கு பெண் புலிகளிடமும் ஒரு யுக்தி இருக்கிறது. தான் இணை சேர்ந்திருக்கும் ஆண் புலிக்குத் தெரியாமல் ஒரே நேரத்தில், அருகாமையில் இருக்கிற இன்னும் சில ஆண் புலிகளுடன் உறவு வைத்துக்கொள்ளும். இதனால், அந்தப் பெண் புலி ஈனும் குட்டிகளை எல்லா ஆண் புலிகளுமே தங்களுடைய குட்டிகள் என்று நம்பி கொல்லாமல் விட்டு விடும்.
குட்டிகளுக்கு 4 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும் பெண் புலி. அதன் பிறகு, பதுங்குதல், பாயுதல், வேட்டையாடுதல் என அனைத்தையும் சொல்லிக் கொடுக்கும். குட்டிகளுக்கு ஒரு வயதான பிறகு, அது ஆண் புலி என்றால், அது தனக்கானத் துணையைத் தேடி செல்வதற்கு அனுப்பி விடும். தட்டக்கொள்ளி பகுதியில் இறந்தது 3 வயதே ஆன ஆண் புலி. அது தன் இணையைத் தேடி அலையும் நேரத்தில்கூட இப்படி சுருக்குக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம். காட்டின் ஒரு காவலாளி இப்போது இறந்துவிட்டான்'' என்கிறார் வேதனையுடன் கோவை சதாசிவம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...