ஃபென்ஜால் புயல்: போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள்!
ஃபென்ஜால் புயல் – பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முதல்வர் ஸ்டாலின் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி, வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்களையும் கண்காணிப்பு அலுவலர்களையும் துரிதமாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பாக தங்குமிட வசதி தேவையான உணவு, பால், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உடனடியாக வழங்கவும் அமைச்சர்கள் தலைமையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் குழு அமைத்து உத்தரவிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வழங்கப்பட்ட உதவிகள்.
விழுப்புரம் மாவட்டம்
தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 67நிவாரண முகாம்களில் 4906 நபர்கள்(ஆண்கள் 2070, பெண்கள் 2239, குழந்தைகள் 597) தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்களுக்காக 16,616 உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக 5 சமுதாய சமையலறையில் (Community Kitchen) இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 27,432 உணவு பொட்டலங்கள் தயார்செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
03.12.2024 அன்றுவரை கனமழையின் காரணமாக 728 வீடுகள் பகுதியாகவும், 132 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 860 வீடுகள் சேதமடைந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு துணை நிற்போம்: பினராயி விஜயன்
கடலூர் மாவட்டம்
35 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது.
இன்னல்களுக்கு ஆளான பொதுமக்களுக்காக 50 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 5,285 நபர்களுக்கு சிகிச்சையும் மருந்து பொருள்களும் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் பகுதிகளில் உடனடியாக தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்த பொழுதிலும் எவ்வித உயிரிழப்பும், ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனினும் கனமழையினால் சேதமடைந்த வீடுகள், கால்நடை இறப்பு ஆகியவற்றிற்கான நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தொடர் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.