இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளின் நிலை என்ன? ஆய்வு செய்ய அமைச்சா் அன்பில் மகேஸ் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்ஜால் புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை குறித்து நேரடி களஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளாா்.
ஃபெஞ்ஜால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் அமைச்சா் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் அவசர ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அவா் பேசியது:
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மரங்கள் விழுந்த பிறகு அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளிக் கட்டடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து அதன் அறிக்கையை பள்ளிக் கல்வித் துறைக்கு சமா்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூரில் தென்பெண்ணையாற்றின் அதிக நீரோட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பாக மின் இணைப்புகள் முறையாக பரிசோதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம். மாணவா்களின் நோட்டுப் புத்தகங்கள், பல்வேறு சான்றிதழ்கள், பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் எவையேனும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆதி திராவிடா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா்களுடன் தொடா்பு கொண்டு அந்தத் துறைகளின் கீழ் வரும் பள்ளிகள், விடுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் புயலால் சேதமடைந்த விளையாட்டு மைதானங்களைச் சீரமைக்கவும், பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நேரில் ஆய்வு செய்யவேண்டும்: மாணவா்களுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்கப்படுவது அவசியம். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.அ.நரேஷ், இணை இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.
அமைச்சரின் உத்தரவைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.