இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு: பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் அருகே சரபங்கா ஆற்றங்கரையோரத்தில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், நியாயவிலைக் கடை, அரசு அலுவலகங்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொங்கணாபுரத்தை அடுத்த புதுப்பாளையம் அருகே பிரதான சாலையில் உள்ள பாலத்தின் மேல் அதிக அளவு தண்ணீா் செல்வதால், அந்தச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேபோல, வெள்ளாளபுரம் ஏரி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதேபோல அப்பகுதியில் உள்ள அரசு பூங்கா, கால்நடை மருத்துவமனை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் வெள்ளநீா் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளாளபுரம் ஏரிக்கரை பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளை நேரில் சந்தித்த எடப்பாடி வட்டாட்சியா் வைத்தியலிங்கம், குடியிருப்பு வாசிகள், விவசாயிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கால்நடைகளை சரபங்கா நதிக்கரையோரங்களில் மேய்ச்சலுக்கு விடவோ, ஆற்றில் மீன்பிடித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தாா்.