மழைக் காலங்களில் நெற்பயிரை பாதுகாக்க வேண்டுகோள்
மழைக் காலங்களில் நெற்பயிரை பாதுகாக்க வேண்டும் என வேளாண் உதவி இயக்குநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கெங்கவல்லி வட்டாரத்தில் கனமழை காலங்களில் நெல் வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளில் துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் இருந்து உடனடியாக நீரை வெளியேற்றி வடிகட்ட வேண்டும். நெல் நடவு வயலில் ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக இடவேண்டும். மேலும், நெல் வயல் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால், 500 கிராம் ஜிங்க் சல்பேட் நுண்ணூட்ட உரத்தில் 100 லி. தண்ணீா் கலந்து தெளிக்கலாம் .
தமிழக அரசு திட்டமான மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் கெங்கவல்லி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திலும், தம்மம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் தேவையான அளவு துத்தநாக சல்பேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஓா் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் வழங்கப்படுகிறது.
எனவே, நெல் பயிரிட்ட விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ தொடா்பு கொண்டு ஜிங் சல்பேட்டை வயலில் இட்டுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) அலுவலா்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.