Pushpa: `அப்ப சாமி இப்ப ஃபீலிங்ஸு; பான் இந்தியா சிங்கரா மாத்தினது புஷ்பா தான்’ - ராஜலட்சுமி செந்தில்
'புஷ்பா 2' வில் 'ஒருவாட்டி...ஒருவாட்டி... பீலிங்க்ஸ்' பாடல்தான் தற்போது 'பல'வாட்டி கேட்க தூண்டிக்கொண்டிருக்கும் ஹார்ட் ஃபயரிங் பாடல்.
'புஷ்பா' படத்தில் 'சாமி சாமி' செம்ம வைரல் பாடலைப் பாடி ட்ரெண்டிங் தாண்டவம் ஆடிய ராஜலட்சுமி 'புஷ்பா 2' வில் மீண்டும் ட்ரெண்டிங் தாண்டவத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனால், இம்முறை தனியாக இல்லை. கணவர் செந்தில் கணேஷுடன். ராஜலட்சுமி- செந்தில்கணேஷ் தம்பதியர் குரலில் 'பீலிங்ஸ் தாண்டவம்' ஆட ஆரம்பித்திருக்கும் சூழலில், இருவரிடமும் பேசினேன். முதலில் நம்மிடம் பேசிய செந்தில் கணேஷ்,
"தேவி ஶ்ரீ பிரசாத் சார் மியூசிக்ல பாடுறது பேரனுபவம். அவரோட ஸ்டூடியோவே ரொம்ப ஜாலியா, செம்ம வைப்பா இருக்கும். ரொம்ப என்கரேஜ் பண்ணி பாடவைப்பார். 'கங்குவா' படத்துல 'ஆதி நெருப்பே' பாட்டையும் அப்படித்தான் பாடவெச்சார். ஆனா, 'புஷ்பா 2' படத்துல நான் பாடுவேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.
'புஷ்பா 2' கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல படப்பிடிப்பு நடத்தினாங்க. ரிலீஸ் தேதியும் அறிவிச்சுட்டாங்க. ஆடியோ ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள், தேவிஶ்ரீ பிரசாத் சார் ஆஃபிஸ்லருந்து போன் வந்துச்சு. நானும் ராஜலட்சுமியும் போனோம். உண்மையிலேயே எந்தப் படத்துக்குப் பாடப்போறோம்னு ரெண்டுப் பேருக்குமே தெரியாது. பாடும்போதுதான், அந்தப் பேப்பர்ல 'புஷ்பா 2'ன்னு போட்டு இருந்துச்சு. ரொம்ப சந்தோஷமாகிட்டேன். அந்த உற்சாகத்துலேயே பாடிமுடிச்சேன். 'வந்துச்சே ஃபீலிங்ஸு... வந்துச்சே ஃபீலிங்ஸு... வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்... பீலிங்ஸு' ரொம்ப ஹைபிட்சான பாட்டு. ரொமான்ட்டிக்கா ஹைபிட்ச்ல பாடணும்னு சொன்னாங்க. கிட்டத்தட்ட 4 மணிநேரம் ரெக்கார்டிங் போச்சு.
கஷ்டப்பட்டுப் பாடினதுக்கு இப்போ பாராட்டுக்களா குவியுறதுல செம்ம சந்தோஷம்" என்கிறவர், தேவிஶ்ரீ பிரசாத் மற்றும் அல்லு அர்ஜுன் பாராட்டியது பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
"அல்லு அர்ஜுன் சார்கிட்டே தேவிஶ்ரீ பிரசாத் சார், 'ஃபீலிங்ஸ் பாடலை இவங்கதான் பாடியிருக்காங்க'ன்னு அறிமுகப்படுத்தினப்போ, 'சாமி பாட்டு பாடினப்பவே தெரியும். ரொம்ப நல்லா பாடியிருந்தாங்க. இந்தப் பாட்டும் சூப்பரா இருக்கு'ன்னு எங்களை ஞாபகம் வெச்சு நலம் விசாரிச்சதை மறக்கவேமுடியாது" என்று நெகிழ்கிறார்.
அவரைத்தொடர்ந்து நம்மிடம் பேசிய, ராஜலட்சுமி, "சாமி பாட்டு எனக்கு எப்பவும் ஸ்பெஷல். என் வாழ்க்கைல மறக்கவே முடியாத பாட்டு. டூயட் இல்லாம இவ்ளோ பெரிய படத்துல பாடினதை பெரிய சாதனையாவே பார்க்கிறேன். 'புஷ்பா' பான் இந்தியா படம்.
கிராமத்துலருந்து வந்த என்னை, பான் இந்தியா சிங்கரா மாத்தினது 'புஷ்பா' பாட்டுதான். 'சாமி சாமி' பாட்டை தமிழர்கள் மட்டுமில்லாம இந்தியா முழுக்கவே பாராட்டுறாங்க. எந்த மாநிலத்துக்குப் போனாலும் ஞாபகம் வெச்சிருந்து சாமி பாட்டை நீங்கதானே பாடுனீங்க'ன்னு கேட்கிறாங்க.
அதுமட்டுமில்லாம, இப்போ கன்னடத்துல துருவ் சார்ஜாவோட படத்திலும் ஒரு பாட்டு பாடியிருக்கேன். எல்லா புகழும் பாராட்டும் தேவிஶ்ரீ பிரசாத் சாருக்குத்தான் போய்ச்சேரும். 'புஷ்பா 2' படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சவுடனே, எல்லோரும் 'நீங்க இந்தப் படத்திலும் பாடுறீங்களா'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. 'இல்லைங்க... இதுல பாடல'ன்னு சொல்லி சமாளிச்சுக்கிட்டு வந்தேன். ஆனா, கடைசி நேரத்துல இப்படியொரு வாய்ப்பு வரும்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. ஷாக் அண்ட் ஸ்வீட் சர்ப்ரைஸ்னுதான்.
'சின்ன மச்சான்' பாட்டுக்கப்புறம் நானும் கணவரும் 'விஸ்வாசம்' படத்துல டூயட் பாடியிருந்தோம். அதுக்கப்புறம், ரெண்டு பேரும் சேர்ந்து இப்போதான் பாட வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதுவும் ஸ்டேஜுல பாடுறமாதிரி செம்ம வைப்போட மக்கள் நல்லா எஞ்சாய் பண்றமாதிரி கிடைச்சதுல டபுள் சந்தோஷம். தேவிஶ்ரீ பிரசாத் சார் நினைச்சிருந்தா, 'சாமி', 'பீலீங்ஸ்' பாடல்களை வேற யாரையாவது பாடவெச்சிருக்கலாம். ஆனா, எனக்கு வாய்ப்பு கொடுத்தது மட்டுமில்லாம என் கணவருக்கும் கொடுத்திருக்கார். இந்த நேரத்துல பெரிய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்" என்பவரிடம் "சாமி சாமி பாட்டு மாதிரி தமிழ் பாட்டு மாதிரி இல்லாம டப்பிங் பாட்டு மாதிரி இருக்குன்னு 'ஃபீலிங்ஸ்' பாட்டை ரசிகர்கள் விமர்சிக்கிறார்களே?" என்றோம்,
"நீங்க சொல்றது உண்மைதான். 'சாமி சாமி' பாட்டு நேரடி தமிழ் பாட்டு மாதிரி இருக்கும். ஆனா, இது கொஞ்சம் டப்பிங் பாட்டு மாதிரி இருந்தாலும் செம்ம வைப்பா இருக்குன்னு பாராட்டுறாங்க. வைப்பும் ரொம்ப முக்கியம்" என்கிறார் அழுத்தமாக.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...