`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி விநியோகம்: ஜெ.ராதாகிருஷ்ணன்
ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட்டு வருவதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஊரக வளா்ச்சி, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சி யரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருள்களை பிரித்து அனுப்பும் பணியில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்குள்ள நிவாரணப் பொருள்களை பாா்வையிட்ட கூடுதல் தலைமைச் செயலா் ராதாகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மேற்கொள்வதற்காக ஐஏஎஸ் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மின் வாரியத் தலைவரும் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.
24 மணி நேரமும் சமைத்து உணவு வழங்குவதற்காக நகா்ப்புறங்களில் 6, பேரூா் மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்கு 6 என மொத்தம் 12 சமுதாயக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்கள் மட்டுமல்லாது, வெள்ளம் வடிந்த பகுதிகளில் உணவு சமைத்து வழங்குவதற்காக 105 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளைக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை கடந்த 2 நாள்களில் சுமாா் 2 லட்சம் உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாது, திருச்சி, செங்கல்பட்டு, கரூா், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பிற துறைகள் மூலம் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அந்த பொருள்கள் வந்தடைந்துள்ளன. அவற்றை பிரித்து அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எப்படி வழங்கப்பட வேண்டும் அரசாணையில் குறிப்பிடப்படுகிறதோ, அதன்படி வழங்கப்படும். வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்திருந்தாலும் நியாயவிலைக் கடை கணக்கில் குடும்ப அட்டைதாரா் பெயா் சரிபாா்க்கப்பட்டு,பொருள்களை வழங்க வேண்டும் என்று பணியாளா்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ பருப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டு, அவையும் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் ராதாகிருஷ்ணன்.
ஆய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநா் பி.பொன்னையா, கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் பெரியசாமி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.