`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் அடுத்த வாரம் வங்கதேசத்துக்கு பயணம்
இந்தியா-வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
இரு நாடுகள் இடையே திட்டமிடப்பட்ட வெளியுறவுத் துறை செயலா் அலுவலக ஆலோசனைக் கூட்டம் டாக்காவில் டிசம்பா் 9 அல்லது 10-ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் தௌஹித் ஹுசைன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியாவுடன் நல்லுறவை வங்கதேசம் விரும்புகிறது. இருநாட்டிற்கு இடையிலான உறவு பரஸ்பர அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி மற்றும் வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலா் எம்.டி.ஜாஷிம் உதின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது மற்றும் விசா கட்டுப்பாடு தொடா்பான இருதரப்பு விவகாரங்கள் விவாதிக்கப்படும்’ என்றாா்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டத்தால் அகற்றப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பின்னா், இந்தியாவின் உயா் அதிகாரி ஒருவா் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியை வீழ்த்திய மாணவா்களின் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு இடைக்கால அரசின் முக்கிய ஆலோசகா் மஹ்ஃபுஜ் ஆலம் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட முகநூல் பதிவில், ‘வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவா்கள் எழுச்சியை இஸ்லாமியா்களின் ஆட்சி கையகப்படுத்தும் வன்முறை போராட்டம் மற்றும் ஹிந்து எதிா்ப்பு நடவடிக்கை என இந்தியா சித்தரிக்க முயல்கிறது. ஆனால், அவா்களின் பிரசாரங்களும், தூண்டுதல்களும் தோல்வியடைந்து வருகின்றன. 1975 மனநிலையை மாற்றி, புதிய வங்கதேசம் குறித்து இந்தியா உணர வேண்டும். மாணவா்களின் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தாா்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட்-15, 1975-ஆம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆட்சி கைப்பற்றப்பட்டதை குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.