ஜெய்ஸ்வால் வம்பிழுத்தது குறித்து மனம்திறந்த மிட்செல் ஸ்டார்க்!
ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்
நமது நிருபர்
ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப்பதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு புதன்கிழமை கேள்வி எழுப்பி பேசுகையில், "14 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னார்குடி-பட்டுகோட்டை அகலப் பாதைப் பணி தொடங்கப்பட்டது. பாமினி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கூட கட்டப்பட்டுவிட்ட பின்பும் அத்திட்டம் அப்படியே விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தல் முடிந்துவிட்டது. ஆனால் அது ஒருவேளை திமுகவின் தொகுதியாக மாறிவிட்டதால் அத்திட்டம் எடுக்கப்படவில்லை போலும். நிலம் கையகப்படுத்தல் நிலுவையில் இருப்பதாக ரயில்வே அமைச்சர் கூறக்கூடாது. நிலம் கையகப்படுத்துதல் நிலுவையில் இருந்தால், நீங்கள் ஏன் மாநில அதிகாரிகளையோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில அமைச்சர்களையோ சென்று சந்திக்கக் கூடாது அல்லது நிலத்தை உடனடியாக வாங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய உங்கள் அதிகாரிகளை ஏன் அனுப்பக்கூடாது? என்றார்.
இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:
மூத்த உறுப்பினர் டி.ஆர். பாலு குறிப்பிட்ட திட்டங்கள் அனைத்தும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இரண்டும் இணைந்து செயல்பட வேண்டிய திட்டங்கள் ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆண்டுக்கு ரூ.879 கோடி. இன்றைக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் ரயில்வேக்கு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறார். இது அதிகமான தொகையாகும். துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் உள்ள திட்டங்களின் வளர்ச்சிக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், 866 ஹெக்டேர் (26%) மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது . இது தொடர்பாக, நாங்கள் தொடர்ந்து மாநில அரசிடம் பேசி வருகிறோம்.
ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு துறைகள் அரசியலிலுக்கு அப்பார்பட்டதாக இருக்க வேண்டும் என்பதால், இதற்கு ஆதரவளிக்க மாநில அரசிடம் எம்.பி.யும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
எனவே, தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ள எம்பியிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் எனது அதிகாரிகளை அனுப்புவேன். நீங்கள் கூறினால் எங்கள் இணை அமைச்சரையும் அனுப்புவேன் என்றார் ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ்.
சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை - திமுக): தமிழகத்தில் பயணிகள் சேவைகள், வசதிகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட உள்ள எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சர் அவையில் அளித்த பதிலில், "திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. எனினும், வெற்றியானது தமிழக அரசின் ஆதரவைச் சார்ந்திருக்கிறது' என்றார்.
கலாநிதி வீராசாமி (வட சென்னை தொகுதி- திமுக):
மக்களவையில் "தமிழகத்தில் புதிய ரயில்வே வழித்தடங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதா' என கேள்வி எழுப்பினார். இதற்கு, ரயில்வே அமைச்சர் அளித்த புதன்கிழமை அளித்த எழுத்துபூர்வ பதிலில், "நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், செயல்படுத்தும் வேகம் என்பது இந்த திட்டம் விரைவான நிலம் கையகப்படுத்துதலை சார்ந்துள்ளது. மாநில அரசு மூலம் ரயில்வே நிலத்தை கையகப்படுத்துகிறது. இதில் தாமதமாவதால் தமிழகத்தில் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள் நின்றுபோயியுள்ளன' என்றார் அமைச்சர்.