பட்டாம்பூச்சிகள் பறக்கும் புது தில்லி: ஆனால் இது நல்ல அறிகுறி இல்லையாம்!
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?
நமது நிருபர்
மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் துரை வைகோ கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் புதன்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது துரை வைகோ இது தொடர்பாக பேசுகையில், "மூத்த குடிமக்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டணச் சலுகைகள் கரோனா நோய்த்தொற்று காலத்தின்போது நிறுத்தப்பட்டது வருந்தத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அந்தச் சலுகை மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்த விவகாரத்தை கடந்த ஜூலை 31-ஆம் தேதி எழுப்பியிருந்தேன். தற்போது இந்த விவகாரத்தில் அரசின் முடிவு குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்' என்றார்.
இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்த பதில்:
முன்பு கூறிய பதிலையே மீண்டும் நான் தெரிவிக்கிறேன். பயணச் சீட்டின் கட்டணம் ரூ. 100-ஆக இருக்கும் நிலையில், பயணிகளிடமிருந்து ரூ. 54 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதன்படி, அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 56,993 கோடி ஒவ்வொரு பயணிக்கும் கட்டணத்தில் 46 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதில் எம்.பி. குறிப்பிட்ட அனைத்து பிரிவினர்களும் அடங்கும்' என்றார்.