"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்
நமது நிருபர்
இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை கேள்விநேரம் முடிந்ததும் இந்த விவகாரத்தை எழுப்பி அவர் பேசியதாவது:
"கிக் எகானமி' எனப்படும் தற்காலிக தொழிலாளர்கள், குறிப்பாக அமேசான் இந்தியா நிறுவனத்தில் கிடங்கு ஊழியர்கள் மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் உள்பட அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நியாயமற்ற ஊதியங்கள் மற்றும் பாதுகாப்பற்ற பணிச் சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அவலநிலையை இந்த அவையின் கவனத்தில் கொண்டு வருகிறேன்.
இந்த நிறுவனத்தின் முதுகெலும்பான இந்தத் தொழிலாளர்கள், நீண்ட நேரம் பெரும் அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு பணியாற்றி மாதம் ரூ.10,000 மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.
இந்தத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் காப்பீடு போன்ற பலன்களை வழங்குவதாக அமேசான் கூறுகிறது. ஆனால், உண்மை இந்த வாக்குறுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
"தொழிலாளர்கள் சுரண்டப்படும்போது இந்தியா முன்னேற முடியாது. நிறுவனங்கள் லாபத்தை விட மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான நீதி என்பது வெறும் கோரிக்கையல்ல; இது ஒரு நியாயமான மற்றும் நீதியான சமூகத்திற்கு அவசியமாகும்' என்று ராகுல் காந்தி கூறும் வார்த்தைகள் நமது தொழிலாளர்களுடன் நின்று அர்த்தமுள்ள மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமையை நமக்கு நினைவூட்டுகின்றன.
சுதந்திர பொருளாதார தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், நியாயமான ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களை உறுதி செய்வதற்கும் அவசர சட்டம் தேவை. இது ஒரு தொழிலாளர் பிரச்னை மட்டுமல்ல, இது ஒரு தார்மிக மற்றும் மனித உரிமை பிரச்னையாகும் என்றார்.