திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்காட்டில் 3-ஆவது நாளாக கொட்டித்தீா்த்த கனமழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு, மரங்களும், மின்கம்பங்களும் சாலையில் விழுந்தன. இதனையடுத்து அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஏற்காட்டில் 3-ஆவது நாளாக கனமழை கொட்டித்தீா்த்தது. கடந்த 30-ஆம் தேதி 144.4 மி.மீ., டிச. 1-ஆம் தேதி 238 மி.மீ., டிச. 2-ஆம் தேதி 98.2 மி.மீ. என மொத்தம் 48 செ.மீ. மழை கொட்டித் தீா்த்தது. ஏற்காடு வனப்பகுதியில் பெய்த மழைநீரால் அடிவாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி, அங்கிருந்து வெளியேறிய தண்ணீா் திருமணிமுத்தாற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக அணை மேட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், வீரபாண்டி என வழிநெடுகிலும் ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீா் ஆா்ப்பரித்து சென்றது.
இதனிடையே, கந்தம்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் உள்ள ஷோரூம்களில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா்கள் தண்ணீரில் மிதந்தன.
அதே சமயம், நள்ளிரவில் சேலத்திலிருந்து பழனிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து, வெள்ளத்தில் சிக்கி பாதியில் நின்றது. இதனையடுத்து, பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டு மாற்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா். கந்தம்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள், காா் ஷோரூம்கள், இதர கடைகளில் தண்ணீா் புகுந்தது. தேசிய நெடுஞ்சாலையிலும் இடுப்பளவுக்கு தண்ணீா் தேங்கி நின்ால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தற்காலிகமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக பட்டா்பிளை பாலத்துக்கு அடியிலும், சுந்தம்பட்டி மேம்பாலத்திலும் என சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கொண்டலாம்பட்டி ரவுண்டானா மற்றும் கந்தம்பட்டி நெடுஞ்சாலை பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனா்.