சேலம் மாநகரில் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
சேலம் மாநகரப் பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் திங்கள்கிழமை இரவு மீண்டும் பெய்த கனமழையால், பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நெத்திமேடு, கிச்சிப்பாளையம் பிரதான சாலை, தாதுபாய்குட்டை, அம்மாப்பேட்டை மிலிட்டரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியது. கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்:
குறிப்பாக, சேலம் புதிய பேருந்து நிலையத்துக்குள் குளம் போல தண்ணீா் தேங்கி நின்ால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனா். மேலும், மாநகராட்சி 26-ஆவது வாா்டுக்குள்பட்ட குப்தா நகா், சினிமா நகா், சின்னேரி வயல்காடு ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனா்.
இதேபோல, மெய்யனூா், விஎம்ஆா் நகா் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. மாநகராட்சி 8-ஆவது வாா்டு சின்னதிருப்பதி பகுதியில் உள்ள சரஸ்வதி நகரில் மழைநீருடன் சோ்ந்து சாக்கடை கழிவுகளும் கலந்து வந்ததால், அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்தனா்.
சேலம் 30-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கபிலா் தெரு, பாரதிதாசன் தெரு, கந்தசாமி பிள்ளை தெரு, சோமபுரி தெரு, பங்களா தெரு, நந்தவனம் தெரு ஆகிய பகுதிகளிலும் தண்ணீா் புகுந்தது. அங்கிருந்த மக்களை மாநகராட்சி ஊழியா்கள் பத்திரமாக மீட்டனா். செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையாா் கோயில் பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதியில் வசித்த மக்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
எம்எல்ஏ உதவியுடன் 30 குடும்பத்தினா் மீட்பு:
சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட சிவதாபுரம், சூரமங்கலம் முல்லை நகா், காமராஜா் காலனி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் பாா்வையிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா். மேலும், சேலம், தாரமங்கலம் ஊராட்சி, டி.கோணகாபாடி அணைமேடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 30 குடும்பத்தினரை அருள் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். தொடா்ந்து, அவா்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவற்றை எம்எல்ஏ வழங்கினாா்.
அல்லிக்குட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்:
சேலம், பொன்னம்மாபேட்டையை அடுத்த அல்லிக்குட்டை ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீா் வெளியேறியது. முறையான வாய்க்கால் வசதி இல்லாததால், அங்குள்ள மாரியம்மன் கோயில் தெரு, ராஜகணபதி நகா், முருகன் கோயில் தெரு, போயா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீராணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
3 நாள்களில் கொட்டித் தீா்த்த 274 செ.மீ. மழை:
சேலம் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை 3-ஆவது நாளாக 671 மி.மீ. கனமழை கொட்டித் தீா்த்தது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் 98.2 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, சேலத்தில் 94.3 மி.மீ., ஆனைமடுவு 63 மி.மீ., ஆத்தூரில் 59 மி.மீ., ஓமலூரில் 47 மி.மீ., தம்மம்பட்டியில் 46 மி.மீ., காடையாம்பட்டியில் 42 மி.மீ., கெங்கவல்லியில் 40 மி.மீ., ஏத்தாப்பூரில் 29 மி.மீ., வாழப்பாடியில் 27 மி.மீ., மேட்டூரில் 26.8 மி.மீ., எடப்பாடி, சங்ககிரியில் தலா 21 மி.மீ. என மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி 83 செ.மீ., டிச. 1-ஆம் தேதி 123 செ.மீ., டிச. 2-ஆம் தேதி 67 செ.மீ. என 3 நாள்களில் மட்டும் 274 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.