Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
தஞ்சை மாநகராட்சி இடம் மேயா் மனைவி பெயரில் பதிவு: வருவாய் அலுவலா் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
தஞ்சாவூா் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை முறைகேடாக மேயரின் மனைவி பெயருக்கு மாற்றியதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலா் அந்த இடம் குறித்த யுடிஆா் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கரந்தையைச் சோ்ந்த பத்மநாபன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
தஞ்சாவூா் அருளானந்தம்மாள் நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இடம் நகராட்சிப் பள்ளி கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் வருவாய் ஆவணங்களில் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு பொன்னுமணி என்பவரின் பெயருக்கு சட்ட விரோதமாக மாற்றியதுடன், அவரது பெயருக்கு பட்டாவும் வழங்கினா். இதற்கு எதிராக மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா், மேயா், வருவாய் அலுவலா்கள் இணைந்து சுயநல நோக்கில் சட்டவிரோதமாக அந்த இடத்தை விற்பனை செய்துள்ளனா். தற்போது, அந்த இடம் மேயா் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா் என்பதால், இந்த இட விவகாரத்தை தமிழக காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பொன்னுமணி, சங்கீதா, தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிா் மனுதாரா்களாகச் சோ்க்கிறது. இந்த வழக்கு தொடா்பாக எதிா் மனுதாரா்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலா் அந்த இடம் குறித்த யுடிஆா் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.