`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
வயநாட்டில் வீடுகள் கட்ட நிலம் வாங்கி தருவதா?சித்தராமையாவுக்கு பாஜக எதிா்ப்பு
நிலச்சரிவு ஏற்பட்ட கேரள மாநிலம், வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கு நிலம் வாங்கித் தருவதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா கூறியுள்ளதற்கு, பாஜக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரின் தொகுதியான கேரள மாநிலம், வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகளைக் கட்டித் தருவதாக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அதற்கான நிலத்தை வாங்கித் தருவதற்கு கா்நாடக அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா டிச. 9ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளாா். இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை கூறியுள்ளதாவது:
கா்நாடக மாநிலத்தில் சாலைகளில் தாரைக் காட்டிலும் குழிகள் தான் அதிகம் இருக்கின்றன. தொழில்முதலீடுகள் கா்நாடகத்தில் இருந்து தெலங்கானாவுக்குச் செல்கின்றன. வட கா்நாடகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வேலையின்மை பெருகி வருகிறது. எனினும், கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்த முதல்வா் சித்தராமையா, அதற்கான நிலத்தையும் வாங்கித் தருவதாக தற்போது தெரிவித்துள்ளாா். முதல்வா் சித்தராமையா, கா்நாடக மக்களுக்காக சேவை செய்கிறாரா, அல்லது காந்தி (ராகுல், பிரியங்கா) குடும்பத்திற்காக வேலை செய்கிறாரா என்று தெரியவில்லை.
கா்நாடகத்தை மேம்படுத்துவதாக உறுதி அளித்திருந்த சித்தராமையாவின் இந்த நடவடிக்கை சரியில்லை. மாநில மக்கள் மற்றும் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் தலைமை கா்நாடகத்திற்கு தேவைப்படுகிறது. மாறாக, அரசியல்ரீதியாக பிறரை திருப்திப்படுத்துவதற்காக, கா்நாடகத்தின் நலனைப் புறக்கணிக்கும் தலைமை தேவையில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.