கொடி கம்ப விவகாரம்: `அதிகாரிகள் மீது தாக்குதல்' - விசிகவினர் 21 பேர் மீது வழக்கு...
Nayanthara: 'அந்த அறிக்கை 'பப்ளிசிட்டி ஸ்டண்டா?'' - தனுஷ் குறித்து வெளிப்படையாக பேசிய நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சமீபத்தில் அவரின் திருமணம் மற்றும் வாழ்க்கை பயணத்தை விளக்கும் வகையிலான ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருந்தது.
இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் முதல் படம் முதல் தற்போது வரையிலான திரைப்படங்களின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்தவகையில் அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளையும் இணைக்க விருப்பப்பட்டுள்ளார்.
நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் தான் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இடையில் காதல் மலர்ந்ததால், இந்த படம் மிகவும் ஸ்பெஷல் என பல இடங்களில் கூறியிருக்கிறார். ஆனால் அந்த படத்தின் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் மறுத்துவிட்டார் என சொல்லப்பட்டது.
இதனால் ஆவணப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷை சாடி ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார் நயன்தாரா.
தனுஷ் அனுமதி அளிக்காதபோதும் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகள் Nayanthara: Behind the Fairytale ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்ததால் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ்.
ஆவணப்படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதால் சிலர் நயன்தாரா விளம்பரத்துக்காக இதுபோல அறிக்கையை வெளியிட்டுள்ளார் எனப் பேசி வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் நயன்தாரா.
''தனுஷ் தனது அழைப்பை எடுக்கக் கூட தயாராக இல்லை என்பதால் இதைப் பொதுவில் முன்வைப்பதைத் தவிர வேறு வழி தனக்கு இல்லை" எனக் கூறியிருக்கிறார் நயன்.
"என்னுடடைய விளம்பரத்துக்காக மற்றொருவரின் இமேஜை கெடுக்கிற ஆள் நானில்லை. எங்களை பெருமளவில் மக்கள் ஆதரித்தனர். ஆனால் அவரது (தனுஷ்) ரசிகர்களாக, நலம் விரும்பிகளாக நிறைய பேர் இருக்கின்றனர். அது நல்லதுதான், அதற்காக நாங்கள் பி.ஆர் ஸ்டண்ட் செய்கிறோம் என்று எப்படி சொல்லலாம்?
அதை ஒரு நோக்கமாக நான் நினைக்கவே இல்லை. எங்கள் மனதில் அப்படி ஒரு விஷயமே தோன்றவில்லை. இந்த படத்தை ஒரு திரைப்படமாக பார்க்க வேண்டியதில்லை. இது ஒரு ஆவணப்படம். உங்களுக்கு ஒரு நபரைப் பிடிக்குமென்றால், அவரைக் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். இதற்கு ஹிட், ஃப்ளாப் என்றெல்லாம் கிடையாது." என ஹாலிவுட் ரிப்போர்டர் இதழுக்கு அளித்த நேர்காணலில் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, "நான் வெளியில் பேசியதாலும், பொதுவெளியில் பேச விரும்பியதாலும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. அதற்குமுன் நான் தனிப்பட்ட முறையில் அவரை தொடர்புகொண்டு உண்மையாகவே ஏன், என்ன பிரச்னை என நேரடியாக பதில் பெற விரும்பினேன்" எனக் கூறியிருக்கிறார் நயன்தாரா.
மேலும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் அவரும் தனுஷின் மேலாளருக்கு தொடர்பு கொண்டு பிரச்னையை சரிசெய்ய முயன்றபோதும் தனுஷை தொடர்புகொள்ள முடியவில்லை என்றுக் கூறியுள்ளார். தனுஷ் மற்றும் நயன் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் மூலமாகவும் தொடர்புகொள்ள முயன்றதாகவும் அப்போதும் அவர் பேச முன்வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், "டிரெய்லர் ரிலீஸ் ஆனபோது அதில் எங்கள் மொபைலில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் இடம் பெற்றிருந்தன. மக்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை... பலரும், 'இந்த காட்சிதான், இது தனுஷின் உரிமை' எனக் கூறினர்.
நாங்கள் படத்தின் காட்சியை கேட்கவில்லை. BTS காட்சிகள் இப்போதுதான் பட ஒப்பந்தத்தின் பகுதியாகியிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தற்செயலாக செல்போன்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்படி எடுக்கப்பட்டதே இந்த வீடியோக்கள். இதைதான் நாங்கள் பயன்படுத்தினோம், இது ஒரு விஷயமே இல்லை.
அவரும் (தனுஷ்) அவரது ஆட்களும் பல பிரச்னைகளை உருவாக்கிய பிறகும், நான், 'ட்ரெய்லர் வெளியான பிறகு யாருக்காவது சிறிய அசௌகரியம் இருந்தால் கூட அதை விட்டுவிடுங்கள்' என்று கூறினேன்.
அவரைப்போல மதிப்புமிக்க, நிறைய மக்களால் அன்பு செய்யப்படுகின்ற நடிகருக்கு எங்களிடமும் அதே அன்பும் மரியாதையும் இருந்தது, ஆனால் இந்த விவகாரத்தில் நடந்தவை நியாயமற்றதாக இருந்ததால் நான் வெளியில் பேசினேன்.
வெளியில் பேசுவதற்கான தைரியம் எங்கிருந்து வந்தது எனக் கேட்டீர்களானால், அந்த தைரியம் உண்மையில் இருந்து வந்தது எனக் கூறுவேன். நான் ஏதாவது ஒன்றை திரித்துப் பேசும்போதுதான் நான் பயப்பட வேண்டும்.
இப்போது நான் இதைச் செய்யவில்லை என்றால், இரு ஒரு வரம்புக்கு மீறி சென்றால், எப்போதும் யாருக்கும் எதையும் வெளியில் சொல்லும் தைரியம் இல்லாமல் போய்விடும்" என்றார் நயன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...