HBD Rajini: `1991-ல் வெளியான `தளபதி' ; `அட... வெரிகுட்’ ஆனந்த விகடன் விமர்சனத்த...
Doctor Vikatan: டி.விக்கு அருகில் உட்கார்ந்து பார்ப்பது பார்வையை பாதிக்குமா?
Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. எப்போதும் டி.விக்கு மிகவும் அருகில் உட்கார்ந்தபடியே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான். சொன்னால் கேட்க மறுக்கிறான். இப்படி டி.விக்கு நெருக்கமாக உட்கார்ந்து பார்ப்பதாலோ, மங்கலான வெளிச்சத்தில் புத்தகம் வாசிப்பதாலோ பார்வை பாதிக்கப்படுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
பொதுவாகவே குழந்தைகள் டி.விக்கு மிக நெருக்கமாக உட்கார்ந்து பார்ப்பதையே விரும்புவார்கள். அப்போதுதான் சிறப்பாக கவனிக்க முடிவதாக நினைப்பார்கள்.
டி.வி திரைக்கு மிக நெருக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பதால், கண்களுக்கு நிரந்தர பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், தொடர்ந்து பல மணி நேரம் அப்படியே டி.வி அல்லது கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பது நிச்சயம் சில பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கண்கள் வறண்டுபோவது, கண்களில் அரிப்பு, கண்களில் நீர் வடிதல், தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். முந்தைய காலத்தில் டி.வி திரைகளின் கதிர்வீச்சு உமிழ்வு மிக மிக அதிகம். தற்போது வரும் டி.வி திரைகளில் கதிர்வீச்சின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது.
கதிர்வீச்சு குறைவு என்பதால் கண்களுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படாது. ஆனால், ஏற்கெனவே குறிப்பிட்ட மற்ற அறிகுறிகளை குழந்தைகள் உணர்வார்கள்.
உங்கள் குழந்தைக்கு அப்படி டி.வி பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து பார்க்கும் வழக்கம் இருந்தால், குறிப்பிட்ட இடைவெளியில் கண் மருத்துவரிடம் அழைத்துச்சென்று கண்களைப் பரிசோதிப்பதை உறுதிசெய்யுங்கள். குழந்தைக்கு மயோப்பியா எனப்படும் கிட்டப்பார்வை பாதிப்போ, ஹைப்பர்மெட்ரோப்பியா எனப்படும் தூரப்பார்வை பாதிப்போ இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள். அப்படி ஏதாவது பிரச்னை இருந்தால் அதற்கேற்ற சரியான கண்ணாடியை அணியச் செய்யுங்கள்.
இருட்டான, மங்கலான வெளிச்சத்தில் படிப்பதும் இதே போன்றதுதான். அது கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், கண்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். அதனால் கண்களை சிரமப்படுத்தாத நிலையில், நல்ல வெளிச்சத்தில் புத்தகம் படிப்பதே சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.